அந்த வேலைக்கு ஒரு நல்ல ஆள் இல்லையா? விளையாடுவதற்கு முன்பே பெங்களூரு அணியை கலாய்த்த இங்கி வீரர் – நடந்தது என்ன

Will Jacks RCb
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசனை 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெற்றது. அதில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதற்காக களமிறங்கிய 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் 7 கிரிக்கெட் வீரர்களை வாங்கி தங்களது அணியை முழுமைப்படுத்தியது. பொதுவாகவே தோல்விகளால் பதற்றமடைந்து அதிரடியான மாற்றங்கள் என்ற பெயரில் சொதப்பலான முடிவுகளை எடுக்கும் அந்த அணி ஏலத்தில் ஒரு சில வீரர்களுக்காக 10 – 15 கோடிகளை வாரி இறைப்பது வழக்கமாகும்.

அதனால் 2008 முதல் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அந்த அணி அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு இம்முறை கட்டுக் கோப்புடன் செயல்பட்டது. குறிப்பாக ஏலத்திற்கு முன்பாகவே பெரும்பாலான வீரர்களை கழற்றி விடாமல் தக்க வைத்த அந்த அணி நிர்வாகம் வெறும் 8 கோடியுடன் இந்த மினி ஏலத்தில் களமிறங்கியது. அதனால் எந்த வீரருக்காகவும் 4 கோடிகளுக்கு மேல் செலவு செய்யாத அந்த அணி இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லியை 1.9 கோடிக்கு வாங்கி அசத்தியது.

- Advertisement -

எடிட்டர் இல்லையா:
மேலும் மற்றொரு இளம் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸை 3.2 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. வெறும் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் கடந்த 2018 முதல் கவுண்டி சாம்பியன்ஷிப் போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு 102 டி20 போட்டிகளில் 2532 ரன்களை 29.10 என்ற சராசரியிலும் 23 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

மேலும் சமீபத்திய டி20 ப்ளாஸ்ட் போன்ற உள்ளூர் தொடர்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல பார்மில் இருப்பதால் கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமான அவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரிலும் அறிமுகமாக களமிறங்கினார். அதில் இதுவரை மொத்தமாக 4 போட்டிகளில் 129 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் எடுத்து இளம் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள அவரை பெங்களூரு நிர்வாகம் இந்த ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கியது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து அவரை வழக்கம் போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சமூக வலைதள பக்கம் சார்பில் வரவேற்கப்பட்டது. அதில் ரசிகர்களை கவர்வதற்காக புதுமையை காட்ட வேண்டும் என்று நினைத்த அந்த அணியின் அட்மின் ஹாலிவுட் படங்களில் சூப்பர்மேன் அவதாரம் எடுக்கப் போகும் ஹீரோவை கண்ணாடி கூண்டுக்குள் அடைத்து மருந்து ஏற்றுவது போன்ற டெம்ப்லேட்டை பயன்படுத்தி அவரை வரவேற்றார்.

ஆனால் இருட்டு அறைக்குள் கண்ணை மூடிக்கொண்டு நிற்பது போல் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகவும் மோசமாக இருப்பதாக கிண்டலடித்தார்கள். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்மின் தங்களுக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களை விமானம் மற்றும் ட்ரோன் வாயிலாக சிங்காரச் சென்னையை வலம் வர வைத்து கீழே இறக்கி விடுவது போன்ற சிறப்பான டிசைனில் வரவேற்றார்கள். அதைப் பார்த்து விட்டு பெங்களூரு அணியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக இருப்பதாக அந்த அணியின் அட்மினை கலாய்த்தார்கள்.

இதையும் படிங்க: மீண்டும் மிரட்டும் மெஹதி ஹசன் – கடைசி நேரத்தில் எளிய வெற்றிக்கு திணறும் இந்தியா, பரபரப்பில் வெல்லப்போவது யார்?

அந்த நிலையில் தம்மை வரவேற்ற பெங்களூர் அணிக்கு பதிலளித்த வில் ஜேக்ஸ் “இந்த வாய்ப்புக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். அதில் விளையாட மிகவும் ஆவலுடன் உள்ளேன்” என்று நன்றி தெரிவித்தார். ஆனால் பின்குறிப்பாக அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்றே தெரியவில்லை என்றும் பதிலளித்த அவர் “ஒரு நல்ல எடிட்டர் கூட இல்லையா” என்ற வகையில் பெங்களூரு அணி நிர்வாகத்தை விளையாடுவதற்கு முன்பாகவே கலாய்த்துள்ளார். அந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement