
கடந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்த வில் ஜேக்ஸ் மெகா ஏலத்திற்கு முன்னதாக கழட்டி விடப்பட்ட வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் அவர் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் அவர் மீது பெரியளவு விமர்சனங்கள் இருந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரது செயல்பாடு சிறப்பாக அமைந்தது.
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுகையில் சுழற்பந்து வீச்சாளரான கரன் ஷர்மா காயம் காரணமாக வெளியேறிய வேளையில் அவரால் ஒரு ஓவரை கூட வீச முடியாமல் போனது. அதன் காரணமாக அவருக்கு பதிலாக 3 ஓவர்கள் வீசிய வில் ஜேக்ஸ் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதுமட்டும் இன்றி 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய போது மூன்றாவது வீரராக களமிறங்கிய அவர் 26 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 36 ரன்கள் குவித்து அசத்தினார். இப்படி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அசத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய வில் ஜேக்ஸ் கூறுகையில் :
இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்தே எனக்கும் சரி, எங்களது அணிக்கும் சரி சற்று சுமாராகத்தான் இருந்தது. அதனால் அனைவருமே வருத்தத்தில் இருந்தோம். ஆனால் தற்போது படிப்படியாக எங்களது அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதில் எனது பங்கும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியின் முதல் பந்திலேயே நான் கேட்சை விட்டதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அதன்பிறகு பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி வெற்றிக்கு கை கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.
அதேபோன்று ஒரு புதிய வீரராக ஒரு பெரிய சாம்பியன் அணிக்குள் முதலில் இணையும்போது சற்று கடினமாகவே இருந்தது. ஆனால் இப்பொழுது மும்பை அணி எனக்கு பழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு வீரருக்குமே இதுபோன்று சகஜ நிலைக்கு திரும்ப சில நேரம் தேவைப்படும். அந்த வகையில் தற்போது நான் அணியுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக உணர்கிறேன். இந்த அணியில் ஏகப்பட்ட ஸ்டார் வீரர்கள் இருப்பதனால் எனக்கு நல்ல நம்பிக்கையும் தைரியமும் இருக்கிறது.
இதையும் படிங்க : பேட்டிங்லாம் ஒன்னும் இல்ல.. சன் ரைசர்ஸ் அணியை நாங்க எளிதில் வீழ்த்த இதுவே காரணம் – ஹார்டிக் பாண்டியா பேட்டி
அதை வைத்து இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினேன். அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி என்னை மூன்றாவது இடத்தில் களமிறக்கினாலும் சரி, ஏழாவது இடத்தில் களமிறக்கினாலும் சரி அணிக்கு என்ன தேவையோ அதை புரிந்து கொண்டு அந்த பொறுப்புடன் இனிவரும் போட்டிகளிலும் எனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வேன் என வில் ஜேக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.