ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி மும்பையில் 45வது போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 6வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை ரியான் ரிக்கல்டன் 58, சூரியகுமார் யாதவ் 54 வில் ஜேக்ஸ் 29 ரன்கள் எடுத்த உதவியுடன் 216 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அடுத்து விளையாடிய லக்னோ 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களுடைய ஐந்தாவது தோல்வியைப் பதிவு செய்தது. அதிகபட்சமாக ஆயுஸ் பதோனி 35, மிட்சேல் மார்ஷ் 34 ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4, ட்ரெண்ட் போல்ட் 3, வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
ஆட்டநாயகன் ஜேக்ஸ்:
இந்த வெற்றிக்கு 29 ரன்கள் மற்றும் நிக்கோலஸ் பூரான், ரிஷப் பண்ட் ஆகிய 2 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தம்முடைய பந்து வீச்சில் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் கடினமாக உழைத்ததே இதற்கு காரணம் என்று வில் ஜேக்ஸ் கூறியுள்ளார். மேலும் ஜஸ்ப்ரித் பும்ராவை வலைப்பயிற்சியில் எதிர்கொள்வதே கடினமாக இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி ஜேக்ஸ் பேசியது பின்வருமாறு. “நான் எப்போதும் பௌலிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேனாக இருந்து வருகிறேன். எனது பௌலிங் முக்கியம். எனது பௌலிங் எனக்கும் அணிக்கும் முக்கியம். அதில் யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் நான் கடினமாக உழைத்துள்ளேன். அதில் முன்னேறுவதற்கு சில விஷயங்கள் இருக்கிறது”
தரமான பும்ரா:
“பூரான், ரிஷப் பண்ட் ஆகியோருடைய விக்கெட்டுகள் எவ்வளவு முக்கியம் என்பது நமக்குத் தெரியும். பூரான் விக்கட்டை எடுத்ததும் நான் நிம்மதியை சந்தித்தேன். எனக்கு இடது கை வீரர்களுக்கு எதிராக அதிகமாக பௌலிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அதை விரும்புகிறேன். மும்பை அணியில் எனது நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுகிறேன். அவர்கள் என்னை வரவேற்கிறார்கள்”
இதையும் படிங்க: 15 நாளில் 9 டூ 2வது இடம்.. லக்னோவை ஈஸியா தோற்கடிக்க இதான் காரணம்.. மும்பை கேப்டன் பாண்டியா மகிழ்ச்சி
“அவர்கள் என்னையும் இந்தக் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கிறார்கள். ஒரு அணியாக நாங்கள் நல்ல ஃபார்மை கண்டறிந்து நன்றாக நகர்கிறோம். பும்ரா அற்புதமான பவுலர். அவரை வலைப்பயிற்சியில் எதிர்கொள்வதே மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படிப்பட்ட அவர் எங்களுடைய அணியில் இருப்பதில் மகிழ்ச்சி. அவருடைய பந்து வீச்சை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார்.



