
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி மழையால் டிராவில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானா நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் 14, டீ ஜோர்சி 1, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 26, கேப்டன் பாவுமா 0, பேடிங்கம் 28, வேர்ரின் 21 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் 97/9 என தடுமாறிய தென்னாப்பிரிக்கா 120 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை கடுப்பேற்றும் வகையில் அபாரமாக பேட்டிங் செய்த டேன் பியேட் 38* ரன்களும் நன்ரே பர்கர் 23 ரன்களும் அடித்து போட்டியையே தலைகீழாக மாற்றினர்.
முன்னிலையில் தென்னாப்பிரிக்கா:
ஏனெனில் அவர்கள் அமைத்த 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் உதவியுடன் தப்பிய தென்னாப்பிரிக்கா தங்களுடைய முதல் இன்னிங்சில் 160 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக சமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் இன்னிங்கில் வெறும் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54* ரன்களும் கேசி கார்ட்டி 26, சமர் ஜோசப் 25 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக வியன் முல்தார் 4, நன்ரே பர்கர் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 14 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 2வது நாளின் முடிவில் 223/5 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது.
அந்த அணிக்கு டோனி டீ ஜோர்சி 39, ஐடன் மார்க்ரம் 51, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதே போல கேப்டன் பவுமா 4, டேவிட் பேடிங்கம் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் கெய்ல் வேர்ரின் 50*, வியன் முல்தார் 34* ரன்கள் குவித்து பேட்டிங் செய்து வருகிறார்கள். அதனால் தற்போது 239 ரன்கள் முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்கா இப்போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெறும் 5 டெஸ்ட் போட்டிகளிலேயே இப்படி ஒரு சாதனையா? அசரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் – விவரம் இதோ
குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 97/9 என தென்னாப்பிரிக்காவை மடக்கிய வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய கையை ஓங்கியது. ஆனால் அப்போது கடைசி விக்கெட்டுக்கு டெயில் எண்டர்களான டேன் பியேட் – நன்ரே பர்கர் அமைத்த 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்து தற்போது வெற்றி வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.