வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் சம்பிரதாய கடைசி போட்டி ஜூலை 12ஆம் தேதி ஜமைக்காவில் இருக்கும் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா போராடி 225 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 46, ஸ்டீப் ஸ்மித் 48 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
மிரட்டிய ஆஸ்திரேலியா:
அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பவுலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 143 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக ஜான் கேம்பல் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக 82 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பவுலிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 121 ரன்களுக்கு சுருட்டியதால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 42 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 5, சமர் ஜோசப் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில் 204 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை நெருப்பாக பவுலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 27 ரன்களுக்கு சுருட்டி வீசியது. ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 7 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டானார்கள்.
மோசமான உலக சாதனை:
அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6, ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். குறிப்பாக 13.1, 13.2, 13.3 பந்துகளில் க்ரீவ்ஸ், சமர் ஜோசப், ஜோமேல் வேரிக்கன் ஆகியோரை அடுத்தடுத்து போலண்ட் அவுட்டாக்கினார். இதன் வாயிலாக பகலிரவு போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை போலண்ட் படைத்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்காக வீரனாக போராடிய ஜடேஜா.. 72 வருடத்துக்கு பின் தனித்துவ சாதனை.. கங்குலி, கபில் தேவ் சாதனை சமன்
அதனால் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அதனுடைய சொந்த மண்ணில் தெறிக்க விட்டு கோப்பையை முத்தமிட்டது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது குறைந்தபட்ச ஸ்கோரை (27) பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் மோசமான உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 1896, 1924இல் தென்னாப்பிரிக்கா 2 முறை 30க்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனை. 1955இல் இங்கிலாந்திடம் 26க்கு ஆல் அவுட்டான நியூசிலாந்து முதலிடத்தில் இருக்கிறது.



