வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அந்த சூழ்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது.
அங்குள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் சிறப்பாக விளையாடி 294/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் சாய் ஹோப் பொறுப்புடன் அதிரடியாக விளையாடி சதத்தை அடித்து 120* (94) ரன்கள் குவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அபாரம்:
அவருடன் ஜஸ்டின் கிரீவ்ஸ் தம்முடைய பங்கிற்கு பாகிஸ்தான் பவுலர்களை அதிரடியாக விளையாடி 43* (24) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதே போல ரோஸ்டன் சேஸ் 36 (29), எவின் லெவிஸ் 37 ரன்கள் குவித்து கை கொடுத்தார்கள். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக நாசிம் ஷா, அப்ரார் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜெய்டேன் சீல்ஸ் நெருப்பாக பவுலிங் செய்தார். அவருக்கு பதில் சொல்ல முடியாமல் சாய்ம் ஆயுப் 0, அப்துல்லா சபிக் 0, பாபர் அசாம் 9, கேப்டன் ரிஸ்வான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். மிடில் ஆர்டரில் சல்மான் ஆகா 30, முகமது நவாஸ் 23* ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
1991க்குப்பின் சாதனை வெற்றி:
அதனால் 29.2 ஓவரில் பாகிஸ்தானை வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி ஓடவிட்ட வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2015 உலகக் கோப்பையில் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தப் போட்டியில் பாகிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே வெஸ்ட் இண்டீஸ் அணியின் முந்தையப் பெரிய வெற்றி.
இதையும் படிங்க: புதிய சூப்பர்ஸ்டார் சிராஜ்.. ஓயாம இந்தியாவை ஜெய்க்க வைக்க அந்த சாப்பாடு தான் காரணம்.. அசாருதீன் பாராட்டு
மேலும் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தோல்வியைக் கொடுத்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் 1991க்குப்பின் 34 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரை வென்று வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு ஜெய்டேன் சீல்ஸ் 6 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.



