- Advertisement -
உலக கிரிக்கெட்

8 வருடம் 9 தோல்வி.. ப்ராவோவை முந்தி ஹோல்டர் வரலாற்று சாதனை.. பாகிஸ்தானுக்கு எதிராக போராடி வெ.இ வெற்றி

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 2வது போட்டி ஆகஸ்ட் மூன்றாம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஃப்ளோரிடாவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானை சிறப்பாக பவுலிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 133/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 38, கேப்டன் சல்மான் ஆஹா 40 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜேசன் ஹோல்டர் மொத்தம் 71 போட்டிகளில் 81* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

ப்ராவோவை மிஞ்சிய ஹோல்டர்:

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பிராவோ சாதனையை உடைத்துள்ள ஹோல்டர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ட்வயன் ப்ராவோ 77 போட்டிகளில் 78 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் சாய் ஹோப் மெதுவாக விளையாடி 21 (30) ரன்கள் எடுத்தார்.

அலிக் அதனேஷ் 2, ஜூவெல் ஆண்ட்ரே 12, ரூதர்போர்ட் 9, ராஸ்டான் செஸ் 16, கேசி கார்ட்டி 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். இருப்பினும் குடகேஷ் மோட்டி அதிரடியான 28 (20) ரன்கள் எடுத்து திருப்புமுனையை உண்டாக்கி அவுட்டானார். ஹசன் அலி வீசிய 19வது ஓவரில் ரோமாரியா செஃபார்ட் சிக்ஸர் பௌண்டரியை அடித்ததால் வெற்றியை நெருங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி:

அப்போது முதல் பந்தில் ஒரு ரன் கொடுத்த ஷாஹீன் அப்ரிடி 2வது பந்தில் செபார்டை 15 (11) ரன்களில் அவுட்டாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மறுபுறம் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக விளையாடி கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்ட போது பவுண்டரியுடன் மொத்தம் 16* (10) ரன்களை ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் 135/8 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

இதையும் படிங்க: ரோஹித், கோலி இல்லாத குறையை முகமது சிராஜ் சரி கட்டுறாரு.. பாராட்டுகளை தெரிவித்த – நாசர் ஹுசேன்

மேலும் கடைசியாக விளையாடிய 7 டி20 போட்டிகளில் சந்தித்த தொடர் தோல்விகளையும் வெஸ்ட் இண்டீஸ் உடைத்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக 8 வருடங்கள் கழித்து ஒரு டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது. 2017இல் கடைசியாக பாகிஸ்தானிடம் வென்ற அந்த அணி அதன் பின் சந்தித்த 9 தொடர் தோல்விகளை இந்தப் போட்டியில் உடைத்து பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -