228 ரன்ஸ் சேசிங்.. வங்கதேசத்தின் கௌரவ சாதனையை உடைத்த வெ.இ.. 10 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் சமன் செய்தது. அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

2வது போட்டி டிசம்பர் 10ஆம் தேதி செயின்ட் கிட்ஸ் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 45.5 ஓவரில் 227 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அசத்தல்:

அதிகபட்சமாக அனுபவ வீரர் முகமதுல்லா 62, டன்ஜித் ஹசன் 46, டன்ஜிம் ஹசன் 45 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் 228 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரண்டன் கிங் – எவின் லெவிஸ் ஆகியோர் ஆரம்பத்திலேயே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அந்த வகையில் 109 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் எவின் லெவிஸ் 49 (62) ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய பிரண்டன் கிங் அரை சதத்தை அடித்து 82 (76) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் மிடில் ஆர்டரில் கேசி கார்ட்டி 45, கேப்டன் சாய் ஹோப் 17*, ரூதர்போர்ட் 24* ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

10 வருடம் கழித்து:

அதனால் 36.5 ஓவரிலேயே 230-3 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரை வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. இதன் வாயிலாக வங்கதேசத்துக்கு எதிராக 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சாய் சுதர்சன்.. என்ன ஆனது? – எப்போது சரியாகும்

கடைசியாக 2014ஆம் ஆண்டு 3 – 0 (3) என்ற கணக்கில் வங்கதேச அணியை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்திருந்தது. அதன் பின் நடைபெற்ற 4 தொடர்களிலும் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது அதை உடைத்து வென்றுள்ளது. மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 10 வருடங்களாக ஒருநாள் தொடரில் தோற்காமல் இருந்து வந்த வங்கதேசத்தின் கௌரவ சாதனை இத்தொடரில் உடைந்துள்ளது.

Advertisement