தமிழ கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர இளம் வீரரான சாய் சுதர்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 47 ரன்கள் சராசரியுடனும், ஒரு சதம் மற்றும் ஆறு சதம் என 1034 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் முடிவில் அவர் குஜராத் அணிக்காக 8 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சாய் சுதர்சன் :
ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஏற்கனவே இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெகுவிரைவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 23 வயதான சாய் சுதர்சன் உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்து வகையான போட்டிகளிலும் அசத்தி வருகிறார்.
இதன் காரணமாக இந்திய அணியிலும் அவர் வெகு விரைவாக முன்னணி வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணிக்காக ஒரு போட்டியில் விளையாடிய அவர் திடீரென அந்த தொடரில் இருந்து முற்றிலுமாக விலகினார்.
இப்படி அவர் திடீரென இந்த தொடரில் இருந்து விலக என்ன காரணம்? என்று அனைவரும் கேள்வி எழுப்பியிருந்த வேளையில் தற்போது லண்டன் சென்றுள்ள சாய் சுதர்சன் அங்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில் : ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் தற்போது அதற்காகவே அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாகவே விளையாட்டு வீரர்களுக்கு இந்த பிரச்சனை வருவது வழக்கம்தான். அதற்காக அவர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு இதே பிரச்சினையால் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : முதல் பாகிஸ்தான் வீரராக மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஷாஹீன் அப்ரிடி – விவரம் இதோ
அதற்கு பதிலாக வெளியான தகவலில் : இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட சாய் சுதர்சன் அடுத்து எட்டு வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என்பதனால் இரண்டு மாதங்கள் வரை அவரால் எவ்வித போட்டிகளிலும் விளையாட முடியாது. அதன் பின்னர் பயிற்சி ஆரம்பித்தால் நிச்சயம் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் சிறப்பாக தயாராகி விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.