தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரின் முதலாவது டி20 போட்டியானது நேற்று டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்று முடிந்தது.
சாதனையை நிகழ்த்திய ஷாஹீன் அப்ரிடி :
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் மில்லர் 82 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்ததால் தென்னாப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி 4 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பாகிஸ்தான் வீரராக மாபெரும் சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் நேற்றைய போட்டியில் அவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுக்களின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் மூன்று வகையாக கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணிக்காக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இன்னும் 6 சிக்ஸர் போதும்.. அறிமுக தொடரிலேயே வரலாற்று சாதனையை நிகழ்த்தவிருக்கும் – நிதீஷ் ரெட்டி
இதற்கு முன்னதாக ஹாரிஸ் ராப், ஷதாப் கான் ஆகியோர் டி20 கிரிக்கெட் 100 விக்கெட்டுகளை கடந்துள்ள வேளையில் தற்போது மூன்றாவது பாகிஸ்தான் வீரராக ஷாஹீன் அப்ரிடி டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கடந்துள்ளார். இருப்பினும் மூன்று வகையான வடிவத்திலும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஷாஹீன் அப்ரிடி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



