ரோஹித் இருந்தும்.. கிங் கோலி இல்லாததால் அனுபவத்தில் திணறும் இந்தியா.. ஆச்சர்யமான புள்ளிவிவரம்

Virat Kohli and Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடந்த அந்த போட்டியில் 3 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தியா முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதனால் வெற்றி நிச்சயம் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் 4வது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா பரிதாபமாக தோற்றது. குறிப்பாக 92 வருடங்களில் தங்களுடைய சொந்த மண்ணில் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாகப் பெற்ற ஒரு போட்டியில் இந்தியா முதல் முறையாக தோல்வியை சந்தித்து அவமானத்தை சந்தித்தது.

- Advertisement -

அனுபவத்தில் தடுமாற்றம்:
இந்த சூழ்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள 2வது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளார்கள். ஏற்கனவே நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் சொந்த காரணங்களுக்காக விலகிய நிலையில் தற்போது அவர்களும் விளையாட மாட்டார்கள் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றே சொல்லலாம்.

இந்நிலையில் 2வது போட்டியில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சேர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக வெறும் 10702 ரன்களை அடித்துள்ளார்கள். ஆனால் இங்கிலாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் மட்டும் தனி ஒருவனாக 11447 ரன்கள் அடித்து ஒட்டுமொத்த இந்திய அணியை விட அதிக அனுபவம் மிக்கவராக திகழ்கிறார்.

- Advertisement -

ஒருவேளை விராட் கோலி இருந்திருந்தால் அவர் அடித்துள்ள 8848 டெஸ்ட் ரன்களையும் சேர்த்து 2வது போட்டியில் இங்கிலாந்தை மிஞ்சும் அனுபவமிக்க அணியாக இந்தியா இருந்திருக்கும். மேலும் முதல் போட்டியில் ரோகித் சர்மா சுமாராக கேப்டன்ஷிப் செய்ததாக விமர்சிக்கும் மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்காது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈஸியா விடமாட்டாங்க.. அந்த 2 வீரர்களும் எப்படியாவது இந்தியாவ ஜெயிக்க வெச்சுருவாங்க.. கமின்ஸ் பாராட்டு

ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் முதல் போட்டியில் இந்திய அணியினர் பின்னடைவை சந்தித்ததும் சோர்வான பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தினர். ஆனால் விராட் கோலி இருந்திருந்தால் ஆக்ரோஷமாக செயல்பட்டு எதிரணியினரை ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கியிருப்பார் என்று மாண்டி பனேசர் கூறியிருந்தார். மொத்தத்தில் விராட் கோலி இல்லாமல் ரோகித் சர்மா தலைமையில் இளம் வீரர்களுடன் 2வது போட்டியில் இந்தியா போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement