சாதித்து காட்டிய பழக்கடை வியாபாரி மகன் – நிச்சயம் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார், நெகிழும் இளம் வீரரின் தந்தை

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒவ்வொரு போட்டியிலும் தனது அசுர வேக பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஜாம்பவான்களின் பாராட்டை பெற்றார். கடந்த வருடம் முதல் முறையாக தமிழக வீரர் நடராஜன் காயமடைந்ததால் ஹைதராபாத் அணிக்காக ஒருசில போட்டிகள் வாய்ப்பு பெற்ற அவர் அப்போதே வேகமாக பந்து வீசி அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி உட்பட பலரின் பாராட்டுக்களை அள்ளினார்.

umran 3

- Advertisement -

அதனால் 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் தக்க வைத்திருந்த நிலையில் இந்த வருடம் பங்கேற்ற 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்த அவர் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வருடமே எளிதாக 145 கி.மீ வேகத்தில் பந்து வீசிய அவர் இந்த வருடம் அசால்டாகவும் தொடர்ச்சியாகவும் 150 கி.மீ வேகத்தில் வீசியது பல வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்களை கூட திரும்பிப் பார்க்க வைத்தது.

சாதித்த உம்ரான்:
குறிப்பாக பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 1 ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட், குஜராத்துக்கு எதிரான போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளில் 4 கிளீன் போல்ட்டாக சாய்த்து ஜாம்பவான் மலிங்காவின் 2 சாதனகளை சமன் செய்தது போன்ற அம்சங்கள் அனைவரையும் வியக்க வைத்தது. அதிலும் டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் 157 கி.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார்.

Umran

அதனால் அவருக்கு இந்திய அணியில் கூடிய விரைவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி போன்ற ஜாம்பவான்கள் ஆதரவு கொடுத்தனர். அதேபோல் தனது 161.3 கி.மீ வேகப்பந்து உலக சாதனையை உடைத்தால் தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் வெளிப்படையாகப் பாராட்டினார். இப்படி அடுத்தடுத்த சிறப்பான செயல்பாடுகளால் ஐபிஎல் முடிந்ததும் நடைபெறும் தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்காக நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்து உம்ரான் மாலிக் சாதித்துக் காட்டியுள்ளார்.

- Advertisement -

பழக்கடை வியாபாரி மகன்:
அதன் காரணமாக ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு விளையாட தேர்வான 2-வது வீரர் என்ற பெருமையையும் பர்வேஸ் ரசூலுக்குப் பின் அவர் பெற்றார். இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்து தனது மகன் சாதித்து விட்டதாக உம்ரான் மாலிக் தந்தை அப்துல் ரசித் தெரிவித்துள்ளார். அங்குள்ள ஒரு நகரில் ஒரு சாதாரண வீதியில் இப்போதும் பழக்கடை வைத்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னை வாழ்த்துவதற்கு நிறைய பேர் அலை மோதினர். நான் இப்போது வீட்டுக்கு சென்று கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளேன். இந்த செய்தியை இப்போதுதான் இன்டர்நெட்டில் பார்த்தேன். நாட்டுக்காக விளையாடுவதை விட வேறு என்ன சாதனை பெரிதாக இருக்க முடியும்”

Umran Malik Father

“ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த நாடே பின்னின்று தமக்கு ஆதரவு கொடுக்க வைத்த அவர் எங்கள் அனைவரையும் பெருமைடைய வைத்துள்ளார். அதற்காக எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றி உடையவர்களாகிறோம். அவர் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்தார். அவர் எப்போதும் தனது திறமை மற்றும் நுணுக்கங்கள் மீது நம்பிக்கை வைத்து கடினமாக உழைத்தார். எனவே இது முழுமையாக அவரின் வெற்றியாகும். கடினமாக உழைத்த அவருக்கு கடவுளும் ஆதரவு கொடுத்தார். அவருடைய கடின உழைப்புக்கான பாராட்டுக்களை நான் பெற மாட்டேன்” என்று கூறினார்.

- Advertisement -

நிச்சயம் சாதிப்பார்:
வேகத்திற்கு ஈடாக ரன்களையும் கொடுக்கும் உம்ரான் மாலிக் ஒரு சில விமர்சனங்களை சந்தித்தாலும் இந்தியாவில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீச கூடிய பவுலர்கள் இல்லாததால் இந்திய தேர்வு குழு அவரை நம்பி தேர்வு செய்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு போட்டியிலும் முடிந்த குறைவான ரன்களை எடுத்து விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் என்பதால் நிச்சயம் விரைவில் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்றும் அவரின் தந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Umran Malik 3

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “தற்போது அவர் மேலும் கடினமாக உழைத்து நாட்டுக்காக சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். அவர் நாட்டுக்காக நீண்ட நாட்கள் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். எங்களின் ஒரே மகனான அவருக்கு நாங்கள் எப்போதும் அன்பையும் ஆதரவையும் வழங்குகிறோம். தற்போது அவர் விரும்பிய அனைத்தையும் பெற்று விட்டார். என்னைவிட எனது மனைவிதான் அவருடைய மிகப்பெரிய ஆதரவாளர்.

இதையும் படிங்க : வம்பிழுந்த பஞ்சாப் கேப்டனை எக்ஸ்ரே எடுக்கும் அளவுக்கு பந்தால் தாக்கிய இளம் எக்ஸ்பிரஸ் பவுலர் – தேவையா இது?

அவர் தனது சிறப்பான செயல்பாடுகளால் நாட்டை பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும். இந்தியாவிற்காக முதல் முறையாக களத்தில் இறங்கும் போது அன்றைய நாளில் நானும் எனது மனைவியும் அவருக்கு ஆதரவாக மைதானத்தில் ரசிகர்களாக குரல் கொடுப்போம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement