இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகளின் மெகா ஏலமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பல்வேறு வீராங்கனைகளையும் அனைத்து அணிகளும் போட்டி போட்டு வாங்கின. அந்த வகையில் தமிழக வீராங்கனையான கமாலினியை 1 கோடியே 60 லட்சம் என்கிற பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியானது வாங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
யார் இந்த தமிழக வீராங்கனை கமாலினி :
10 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலையுடன் இந்த ஏலத்தில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை கமாலினியை வாங்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மென்டரும், தலைமை பயிற்சியாளரும் இணைந்து கமாலியினியின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய தொகையான 1 கோடிய 60 லட்சம் என்ற தொகைக்கு அவரை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் கமாலினி யார்? என்ற தேட அனைவரது மத்தியிலும் எழுந்துள்ள வேளையில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம். அந்த வகையில் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கை வெளிப்படுத்தும் தமிழக வீராங்கனை தான் கமாலினி. அதே போன்று பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகியவற்றை தாண்டி அவரால் பகுதி நேரத்தில் சுழற்பந்தும் வீச முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
16 வயதான கமாலினி தமிழக 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக அக்டோபர் மாதம் நடைபெற்ற தொடரில் விளையாடி வெற்றியும் பெற்றிருந்தார். அந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடியிருந்த அவர் 10 சிக்ஸர்களுடன் 311 ரன்கள் குவித்து அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக சாதனை நிகழ்த்தியிருந்தார்.
அதுமட்டும் இன்றி 19 வயதுக்குட்பட்டோர் இந்திய பி மகளிர் அணியில் விளையாடியிருந்த அவர் அந்த தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மலேசியாவில் நடைபெற்ற அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாடிய அவர் 29 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். தனது 11-வது வயதில் மதுரையில் உள்ள அகாடமியில் பயிற்சிகளை துவங்கிய அவர் அவரது பெற்றோரின் வழிகாட்டுதலின் கீழ் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.
இதையும் படிங்க : என்னோட மகளால நாங்க இப்போ நல்லா வாழப்போறோம்.. சிம்ரன் ஷையிக்கின் தந்தை பேட்டி – யார் இவர்?
பின்னர் அவரது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் கவனத்தை ஈர்த்திருந்த அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் கடந்த 2022-ஆம் ஆண்டு இணைந்தார். படிப்படியாக முன்னேறி வந்த அவர் தற்போது 16 வயதிலேயே மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



