பேசாம ஐசிசியை மூடிட்டு உலக கிரிக்கெட்டை இந்தியாவிடம் ஒப்படைங்க – பிசிசிஐயை விளாசும் பாக் ஜாம்பவான்

Jay-shah
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பையின் 16வது தொடர் வரும் 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் எல்லை பிரச்சினை காரணமாக அதில் பங்கேற்க இந்திய அணி அந்நாட்டுக்கு பயணிக்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளது இரு நாட்டுக்குமிடையே மீண்டும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை நிறுத்தியுள்ள இவ்விரு அணிகளும் ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுகின்றன.

Jay-shah

- Advertisement -

அந்த நிலையில் இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலால் தடைபட்டுக் கிடந்த சர்வதேச கிரிக்கெட்டை கடுமையான போராட்டத்திற்குப் பின் வெற்றிகரமாக நடத்தி வரும் பாகிஸ்தான் வாரியம் 2008க்குப்பின் 2வது முறையாக ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை வாங்கியுள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் ஜெய் ஷா புதிய தலைவராக பொறுப்பேற்ற போது அவரது தலைமையில் இதர உறுப்பு நாடுகளின் அனுமதியுடன் அந்த உரிமையை அந்நாட்டு வாரியம் போராடி வாங்கியது.

ஆனால் தற்போது தங்களிடம் கலந்தாலோசிக்காமல் ஆசிய கவுன்சில் தலைவர் இப்படி பேசியுள்ளது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் வாரியம் நீங்கள் எங்களது நாட்டுக்கு வராமல் போனால் அதே 2023இல் உங்களுக்கு நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 23இல் மெல்போர்ன் நகரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்காமல் புறக்கணித்து இப்போதே இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் எப்படி செயல்பட வேண்டும் என இந்தியா சொல்ல முடியாது எனவும் அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

IND vs PAK Babar Azam Rohit Sharma

ஐசிசியை மூடுங்க:
ஆனால் இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட இதர நாடுகள் ஆசிய கவுன்சில் வருமானத்தை பங்கு போடும் நிலையில் இந்தியா மட்டும் அதற்கு நிதி கொடுக்கும் நாடாக உள்ளது. அத்துடன் ஆசிய கவுன்சில் தலைவராக ஜெய் ஷா இருப்பதால் இந்த விஷயத்தில் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதை விட 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை 94 போட்டிகளாக விரிவு படுத்துவதற்காக சர்வதேச கால அட்டவணையில் பிசிசிஐ செய்யும் மாற்றத்தை ஐசிசியால் கூட தடுக்க முடியவில்லை.

- Advertisement -

அந்தளவுக்கு உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் இப்படி ஆசியா முதல் உலகம் வரை நடைபெறும் அனைத்து கிரிக்கெட்டையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து மறைமுகமாக ஆட்சி செய்யும் போது பெயருக்காக ஐசிசி எதற்கு? என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆசிய நாடுகளின் நலனுக்காக நடத்தப்படும் ஆசிய கோப்பையில் இப்படி அரசியல் நடத்துவதற்கு பதிலாக மொத்தமாக நிறுத்தி விடலாம் என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Javed

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐசிசி எதற்கு உள்ளது? ஒரு வேளை இந்தியாவின் விருப்பப்படி அனைத்தும் நடந்தால் மொத்தமாக ஆசிய கோப்பையை நிறுத்துங்கள். நாம் ஆசிய கண்டத்தில் இருக்கிறோம். அந்த தொடரில் ஒருவருக்கொருவர் நாம் பரஸ்பரமாக விளையாடினால் மட்டுமே நன்மையை பெற முடியும். அதனால் கிரிக்கெட்டில் நீங்கள் அரசியலில் கொண்டு வரக்கூடாது. வீரர்களின் நலனுக்காக அதை தவிர்க்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்”

“இந்த தேர்வு தவறானது. ஆனால் இவ்வாறு நீங்கள் நடந்தால் பேசாமல் கிரிக்கெட்டை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் ஏற்கனவே உலகில் 8 முதல் 10 அணிகள் மட்டுமே தரமாக விளையாடி வருகின்றன. அதனால் கிரிக்கெட்டை உலக அளவில் வளர்க்க நினைத்தால் இது போன்ற (அரசியலை) நிகழ்வுகள் நடைபெறக் கூடாது” என்று கூறினார். அதாவது தயவு செய்து கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இந்த பிரச்சனையில் ஐசிசி தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார். அப்படி அல்லாமல் அனைத்துமே இந்தியாவின் விருப்பப்படி நடந்தால் பின்பு ஐசிசியை கலைத்து விட்டு இந்த ஆசிய கோப்பையையும் மொத்தமாக நிறுத்தி விடலாம் என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement