உங்க இஷ்டத்துக்கு செய்யமுடியாது, அஷ்வினை கோபத்துடன் சாடிய 2 ஜாம்பவான் வீரர்கள் – என்ன நடந்தது

Ashwin
- Advertisement -

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்கு போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து கிரீஸ் விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தார். ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் அந்த வகையான அவுட் மன்கட் என்ற பெயரில் அழைக்கப்பட்டதுடன் விதிமுறைக்கு புறம்பாக பார்க்கப்பட்டு வந்தது. இருப்பினும் பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் நோபால் கொடுத்து அதற்கு தண்டனையாக ஃப்ரீ ஹிட் கொடுக்கப்படுகிறது.

ஆனால் பேட்ஸ்மேன்கள் மட்டும் பெரும்பாலான தருணங்களில் பந்து வீசுவதற்கு முன்பாகவே வேகமாக சிங்கிள் எடுப்பதற்காக பல அடிகள் முன்னோக்கி நகர்வதை அம்பயர் உட்பட யாரும் கண்டு கொள்வதில்லை. அதனால் பவுலர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா என்ற கருத்தை கையிலெடுத்த தமிழக வீரர் அஷ்வின் ஐபிஎல் தொடரில் பட்லரை அவுட் செய்து உலக அளவில் விமர்சனங்களையும் திட்டுகளை வாங்கினாலும் விதிமுறைக்குட்பட்டு செயல்பட்டதாக தனது கருத்தில் விடாப்பிடியாக நின்றார். மேலும் உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் இதை அனைத்து பவுலர்களும் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

- Advertisement -

அஷ்வினின் குரல்:
அவரது தொடர்ச்சியான கோரிக்கையில் நியாயமிருந்ததால் மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான அவுட்டிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வகிக்கும் எம்சிசி அமைப்பு வெளியிட்ட அறிவிப்பை ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதை துச்சமாக நினைத்து நாசர் ஹுசைன், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் நேர்மைக்கு புறம்பாக தீப்தி செயல்பட்டதாக விமர்சித்தனர். அந்த வரிசையில் இணைந்த இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் மன்கட் செய்வதற்காக வேண்டுமென்றே காத்திருந்து தீப்தி செயல்பட்டதாக ட்விட்டரில் விமர்சித்தார்.

அவருக்கு “உங்களது கருத்துப்படி அந்த தருணத்தில் விழிப்புடன் செயல்பட்டதற்காக தீப்தி சர்மாவுக்கு பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் என்ற விருதைத் தான் கொடுக்க வேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் அஷ்வினின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜாம்பவான் இலங்கை பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சமீபத்திய பேட்டியில் காட்டத்துடன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்ன பிரசன்ஸ் ஆஃப் மைண்ட்? விழிப்புடன் செயல்படாத எந்த கிரிக்கெட் வீரர் வீராங்கனையாலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாது. மேலும் அவுட் செய்வதற்கு முன்பாக எதிர்ப்புறம் இருந்த வீராங்கனைக்கு தீப்தி சர்மா எச்சரிக்கை கொடுத்திருந்தால் அவரை நான் பாராட்டியிருப்பேன். அவ்வாறு செய்வதே நேர்மையை கடைபிடிக்கும் சரியான வழியாகும். ஆம் விதிமுறைகளின்படி தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது சரியானது தான். ஆனால் அது விதிமுறைக்கு உட்பட்டதே தவிர நேர்மைக்கு உட்பட்டது கிடையாது. மிகவும் அழுத்தமான வெள்ளைப் பந்து போட்டிகளில் எதிர்ப்புறம் இருக்கும் பேட்டர்கள் தொடர்ச்சியாக கிரீஸ் விட்டு வெளியேறினால் மட்டுமே இந்த வகையான அவுட் நியாயமாகும். இல்லையேல் நியாயமில்லை” என்று கூறினார்.

அதேபோல் விதிமுறைகளை தாண்டி முதலில் கிரிக்கெட்டை நேர்மையுடன் விளையாட வேண்டும் என்பதே முக்கியம் என்று ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முன்னாள் இந்திய வீரர் சயீத் கிர்மானியும் பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி அதே பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தைரியம் மற்றும் விழிப்புடன் செயல்படுவது எங்கே? விழிப்புடன் செயல்படுவதற்கு விருதா? மன்னிக்கவும் அஷ்வின். கடந்த காலங்களில் இதுபோன்ற துணிச்சலான செயல்களின் ஒரு கட்சியாக நீங்கள் இருந்தீர்கள்”

“ஆனால் அதை விட்டுவிட்டு வாருங்கள் தோழரே, மீண்டும் ஜென்டில்மேன் விளையாட்டை கொண்டு வாருங்கள். மேலும் எதிர்ப்புறம் இருக்கும் பேட்டர்கள் பந்து வீசுவதற்கு முன்பாகவே நகர்ந்தால் வரலாற்றில் வால்ஷ், ரிச்சர்ட்ஸ் நடந்து கொண்டதைப் போல எச்சரிக்கை மட்டும் கொடுங்கள். அதையும் மீறி அவர்கள் நகர்ந்தால் பின்னர் ரன் அவுட் செய்யுங்கள்” என்று கூறினார்.

அதாவது ரன் அவுட் செய்வதற்கு முன்பாக ஒன்றுக்கு இரண்டு முறை பவுலர்கள் எச்சரிக்கை கொடுக்க வேண்டுமென இந்த முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மன்கட் அவுட் இப்படி அதிகாரப்பூர்வமாக செய்வதற்கு காரணகர்த்தாவாக இருந்த அஷ்வின் மீது அவர்கள் கடுமையான கோபத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement