
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துதுள்ளது.
அப்போட்டி ஆக்லாந்து கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து 20 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 207/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மார்க் சேப்மன் 78 (28) ரன்கள் விளாசி மிரட்டினார்.
அவருடன் டிம் ராபின்சன் 38, டேரில் மிட்சேல் 28* ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ரோஸ்டன் செஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்க்கு பிரண்டன் கிங் 0, அகிம் அகஸ்டி 7, ஜேசன் ஹோல்டர் 16, ரோஸ்டன் சேஸ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். நிதானமாக விளையாட முயற்சித்த அலிக் அதனாஸ் 33 (25), கேப்டன் ஷாய் ஹோப் 24 (26) ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர்.
அதனால் 13 ஓவரில் 93/6 என சரிந்த வெஸ்ட் இண்டீஸ் தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது ரோவ்மன் போவல் நியூசிலாந்து பவுலர்களை சிக்சர்களாக அடித்து வெற்றிக்கு போராடினார். அவருடன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரொமாரியா ஃசெபார்ட் 1 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்க விட்டு 34 (16) ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த மேத்தியூ போர்ட்ஜ் தமது பங்கிற்கு அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது போர்ட்ஜ் 2 பவுண்டரி அடித்தார். ஆனால் 4வது பந்தில் எதிர்ப்புறம் போராடிய போவல் 1 பவுண்டரி 6 சிக்ஸருடன் 45 (16) ரன்னில் அவுட்டானார். இறுதியில் போர்ட்ஜ் 29* (13) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 204/8 ரன்களை மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் போராடி தோற்றது.
இதையும் படிங்க: பிட்ச்சை பாத்து அவங்ககிட்ட கேட்டு ஆஸியை அடிச்சேன்.. பவுலிங் பிளான் இது தான்.. ஆட்டநாயகன் அக்சர் பேட்டி
இருப்பினும் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற வெறித்தனத்துடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கடைசி 4 ஓவரில் 26 பந்துகளில் (1 நோபால், 1 ஒய்ட் உட்பட) மட்டும் 2 விக்கெட்டுகள் இழந்து 87 ரன்கள் அடித்தது. அதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியின் சேசிங்கில் டெத் (16 – 20) ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இதே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இங்கிலாந்து கடைசி 4 ஓவரில் 86/1 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.