IND vs WI : இந்தியாவை சாய்க்க 2 வருடம் கழித்து சேர்க்கப்பட்ட நட்சத்திர வீரர் – ஒருநாள் தொடருக்கான அறிவிக்கப்பட்ட வெ.இ அணி இதோ

IND vs WI T20I
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. இருப்பினும் கடைசி நாளில் மழை வந்ததால் அப்போட்டி டிராவல் முடிந்த காரணத்தால் வெற்றி வாய்ப்பை இழந்த இந்தியா 1 – 0 (2) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

அந்த வகையில் எதிர்பார்த்தது போலவே உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்தது என்றே சொல்லலாம். மறுபுறம் சொந்த மண்ணில் மீண்டும் மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் கடைசி போட்டி டிராவில் முடிந்ததால் மழையின் உதவியுடன் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை சந்திக்கும் அவமானத்திலிருந்து தப்பியது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்க உள்ளது.

- Advertisement -

நட்சத்திர வீரரின் கம்பேக்:
வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் களமிறக்கும் சாய் ஹோப் தலைமையிலான தங்களுடைய அணியை வெஸ்ட் இண்டீஸ் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியதால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் நட்சத்திர வீரர் சிம்ரன் ஹெட்மயரை 2 வருடம் கழித்து தேர்வு செய்துள்ளது.

கடந்த 2017இல் அறிமுகமாகி இதுவரை 47 ஒருநாள் போட்டிகளில் 1447 ரன்களை 35.29 என்ற சராசரியில் எடுத்துள்ள அவர் 5 சதங்களை அடித்து தரமான வீரராக தன்னை அடையாளப்படுத்தினார். இருப்பினும் 2021க்குப்பின் சரிவை சந்தித்த அவர் கடைசியாக கடந்த 2021 ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார். அத்துடன் கடந்த 2022 டி20 உலக கோப்பையில் தேர்வாகியும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தை தவற விட்டதால் கடைசி நேரத்தில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டதை ரசிகர்களால் மறக்க முடியாது.

- Advertisement -

ஆனால் அதன் பின் ஐபிஎல் தொடரில் குறிப்பாக இந்த வருடம் ராஜஸ்தான் அணியில் 13 இன்னிங்ஸில் 299 ரன்களை எடுத்து ஃபினிஷராக அசத்தியதன் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் கடைசி நேரங்களில் இந்தியாவை அதிரடியாக எதிர் கொள்வதற்காகவே அவர் 2 வருடங்கள் கழித்து தேர்வாகியுள்ளார். அதே போல இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஓசினோ தாமஸ் நீண்ட நாட்கள் கழித்து தேர்வாகியுள்ள இந்த தொடரில் ஜெய்டேன் சீல்ஸ், யானிக் கேரி ஆகியோரும் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடரில் விளையாடுவதால் நட்சத்திர வீரர் நிக்கோலாஸ் பூரான் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை. ஆனாலும் ரோவ்மன் போவல், ப்ரண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ், அல்சாரி ஜோசப், ரோமானியா செஃபார்டு போன்ற தரமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஓரளவு வலுவாகவே இருக்கிறது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs WI : இதுல பாராட்ட என்ன இருக்கு? வரலாற்று சாதனைகளை படைத்த விராட் – ரோஹித் மீது கவாஸ்கர் அதிருப்தி, காரணம் இதோ

இந்திய ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இதோ:
ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் போவல் (துணை கேப்டன்), அலிக் அதனேஷ், யானிக் கேரி, கேசி கார்ட்டி, டாமினிக் ட்ரேக்ஸ், சிம்ரோன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், கெயில் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டேன் சீல்ஸ், ரொமானியா செபார்டு, கெவின் சின்க்ளைர், ஓசினோ தாமஸ்

Advertisement