வீடியோ : முக்கிய நேரத்தில் ஹாட்ரிக் எடுத்த பவுலர் சாதனை, 1 ரன் வித்யாசத்தில் ஜிம்பாப்வே பரபரப்பான த்ரில் வெற்றி

ZIm vs NED
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் தங்களது இடத்தை பிடிப்பதற்கு வழிவகுக்கும் ஒன்டே சூப்பர் லீக் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் மார்ச் 23ஆம் தேதியன்று தலைநகர் ஹாராரேயில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே சீரான இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும் 49.2 ஓவரில் போராடி 271 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு கேப்டன் க்ரைக் எர்வின் 39 (42), வெஸ்லே மாதேவர் 43 (50), கேரி பேலன்ஸ் 77 (71) என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் க்ளைவ் மடாண்டே 52 (57) ரன்களை விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார். நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக சரிஸ் அகமது 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 272 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணிக்கு தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 14 ரன்களில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டாம் கூப்பர் 9 பவுண்டரியுடன் 74 (84) ரன்கள் குவித்து ரன் அவுட்டானார்.

- Advertisement -

திரில் வெற்றி:
அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் ஓ’தாவுத்தை 6 பவுண்டரி 2 சிக்சருடன் 81 (103) ரன்களில் நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராசா அவுட்டாக்கினார். இருப்பினும் அந்த பேட்ஸ்மேன்களின் நல்ல ரன் குவிப்பால் 43 ஓவரில் 213/3 ரன்கள் எடுத்த நெதர்லாந்து வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் வெஸ்லே மாதவரே வீசிய 44வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஆக்கர்மேன் 28 ரன்களில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய நிதமனரு மற்றும் வேன் மீக்ரம் ஆகிய 2 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த பந்துகளில் கிளீன் போல்ட்டாக்கி டக் அவுட்டாக்கிய வெஸ்லே மாதேவரே 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த 3வது ஜிம்பாப்வே பவுலர் என்ற சிறப்பான சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. எட்டொ பிரடன்ஸ் : இங்கிலாந்துக்கு எதிராக, ஹாராரே, 1997
2. ப்ரோஸ்பேர் உட்செயா : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2014
3. வெஸ்லே மாதேவரே : நெதர்லாந்துக்கு எதிராக, ஹராரே, 2023*

- Advertisement -

மேலும் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் இது 50வது ஹாட்ரிக் விக்கெட்டுகளாகும். அதை தொடர்ந்து வந்த சரிஸ் அஹமத் 8, மூசா அஹமத் 4 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 9 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. டெண்டாய் சதாரா வீசிய அந்த ஓவரில் ரியான் க்ளன் முதல் பந்தில் பவுண்டரி அடித்து 2வது பந்தில் டபுள் எடுத்து 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார்.

அதனால் பரபரப்பு ஏற்பட்ட அந்த போட்டியில் 4வது பந்தில் 2 ரன்கள் எடுத்த பிரெட் க்ளாசேன் 5வது பந்தில் அதிரடியான சிக்ஸரை பறக்க விட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடிக்க தவறிய ரியான் க்ளன் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். அதனால் 50 ஓவரில் நெதர்லாந்தை 270 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஜிம்பாப்வே வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து தங்களது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் தலை நிமிர்ந்தது.

இதையும் படிங்க:காப்பாத்துறேன் என்ற பெயரில் தடுமாறும் அவரது கேரியரை முடிச்சுறாதீங்க, ரோஹித் – ட்ராவிட்டை விளாசும் அஜய் ஜடேஜா

இந்த வெற்றிக்கு ஹாட்ரிக் விக்கெட்களையும் 43 ரன்களையும் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட வெஸ்லே மாதேவரே ஆட்டநாயகன் விருதை வென்றார். இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 25ஆம் தேதியன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement