ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. மறுபுறம் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 2019க்குப்பின் 4 வருடங்களாக தொடர்ந்து 26 தொடர்களில் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் சாய்த்து ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
முன்னதாக இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறியதால் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் விளையாடும் வாய்ப்பு பெற்றார். உள்ளூர் அளவில் கடுமையாக போராடி தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவர் பெரிய ரன்களை குவித்து குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். அப்படி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் சுமாராகவே செயல்பட்டார்.
விளாசும் ஜடேஜா:
அதே போல் சற்று நிதானத்துடன் விளையாடிய ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஆரம்பம் முதலே தடுமாறும் அவர் 24.07 என்ற சுமாரான சராசரியில் ஒரு சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 3 சதங்களை எடுத்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார் என்பதற்காக இத்தொடரில் வாய்ப்பு பெற்று முதல் 2 போட்டிகளில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டான அவர் சென்னையில் நடைபெற்ற 3வது போட்டியில் அதையும் மிஞ்சி அஸ்டன் அகர் சுழலில் முதல் பந்திலேயே கிளீன் போல்டானார்.
அதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனை படைத்துள்ள அவருக்கு வாய்ப்பு கொடுத்து காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் கேரியரை முடித்து விடாதீர்கள் என்று ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோரை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் போது சிலர் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள்”
“ஆனால் உங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது என்பதே நிதர்சனமாகும். அது உங்களது தடுமாற்றமான முடிவில் தெளிவாகத் தெரிகிறது. அதாவது தற்சமயத்தில் சூரியகுமார் நல்ல ஃபார்மில் இல்லை என்பதால் வழக்கமான 4வது இடத்திற்கு பதிலாக சற்று கீழே இறக்கும் முடிவை நீங்கள் எடுத்தீர்கள். ஆனால் அது அவருக்கு மேலும் கடினத்தை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு வீரர் நல்ல பார்மில் இருக்கும் போது பேட்டிங் செய்ய காத்திருக்க வைத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் சுமாரான பார்மில் இருக்கும் போது இப்படி காத்திருக்க வைத்தால் அவரது மனம் பல கோணங்களில் செல்லும்”
“சூரியகுமார் யாதவ் 360 டிகிரியிலும் அடிக்கும் திறமை கொண்டவர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு விளையாட தெரியாது என்று அர்த்தமில்லை. அவை அனைத்தும் மனதை பொருத்ததாகும். எடுத்துக்காட்டாக மனதளவில் பாதிக்கப்பட்ட காரணத்தாலேயே நீண்ட காலமாக விராட் கோலி பார்மின்றி தவித்தார். அந்த வகையில் மனதளவில் தடுமாறும் ஒரு பேட்ஸ்மேனை காத்திருக்க வைத்து பேட்டிங் செய்ய வைத்தால் அவரது சந்தேகம் மேலும் அதிகரிக்கும்”
இதையும் படிங்க: இனிமே இந்த தப்பை எல்லாம் செய்யாதீங்க. கொஞ்சம் கரெக்ட்டா இருங்க. ரோஹித்துக்கு அறிவுரை வழங்கிய – சுனில் கவாஸ்கர்
“எங்களது காலத்தில் 4வது விளையாடுபவர் சுமாரான ஃபார்மில் இருக்கும் பட்சத்தில் 7வது இடத்தில் அனுப்புவோம். ஏனெனில் அந்த இடத்தில் ஏற்கனவே தோல்வி 60 – 80% உறுதியாக இருக்கும். எனவே தடுமாறுபவரை மேல் வரிசையில் களமிறக்கினால் தான் பார்மை மீட்டெடுக்க உதவும். அதை விட்டுவிட்டு அவரை நீங்கள் காப்பாற்ற நினைத்தால் போட்டி அவரை மேலும் கொன்று விடும்” என்று கூறினார்.