IPL 2023 : இருக்கும் ஃபார்முக்கு இந்த சீசனில் அவர் நிச்சயமா 600 ரன்கள் அடிப்பாரு – இளம் இந்திய வீரரை பாராட்டும் பார்த்திவ் படேல்

Parthiv
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெறும் 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையை தோற்கடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அகமதாபாத் நகரில் மார்ச் 31ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 178/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருத்ராஜ் கைக்வாட் அதிரடியாக 92 (50) ரன்கள் எடுத்தார். அதைத் துரத்திய குஜராத்துக்கு இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக 62 (36) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

கடந்த வருடம் 483 ரன்கள் குவித்து முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் அதை 132.33 என்ற குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தது ஒரு தரப்பினரிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனாலும் அதன் காரணமாக இந்தியாவுக்காக மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சதமடித்து அபாரமாக செயல்பட்டார்.

- Advertisement -

600 ரன்கள் அடிப்பாரு:
அதை விட கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 188 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் இரட்டை சதமடித்து சாதனை படைத்த அவர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரிலும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் சதமடித்து இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். அதன் வாயிலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் வருடத்தில் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனை படைத்த அவர் சச்சின், விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்தியாவின் வருங்கால சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

குறிப்பாக தற்போதுள்ள ஃபார்ம் காரணமாக முந்தைய சீசனை விட இந்த சீசனில் 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாடுவது குஜராத் அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது உச்சகட்ட ஃபார்மில் ஜொலித்து வரும் சுப்மன் கில் நிச்சயமாக இந்த சீசனில் 600 ரன்களுக்கு மேல் அடிப்பார் என்று முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த போட்டியில் குஜராத் தங்களுடைய சேசிங்கை துவக்கிய விதம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக முதல் 6 ஓவர்களில் எவ்வளவு வேண்டுமானாலும் அடித்து நொறுக்குங்கள் என்ற சுதந்தரத்தை கொடுத்தது போல ரித்திமான் சகா அதிரடியாக விளையாடினார். அந்த பிட்ச்சில் 179 என்ற இலக்கு குறைவானது என்றாலும் அதிரடியான தொடக்கம் அவசியமாக இருந்தது. அந்த தொடக்கத்தை குஜராத் அப்படியே கடைசி வரை பயன்படுத்தியது என்றே சொல்லலாம்”

Parthiv 2

“குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது கொண்டுள்ள ஃபார்மை அப்படியே இந்த ஐபிஎல் தொடருக்கு சுப்மன் கில் எடுத்து வந்துள்ளார். எனவே தற்போதுள்ள ஃபார்முக்கு சுப்மன் கில் நிச்சயமாக இந்த சீசனில் 600க்கும் மேற்பட்ட ரன்களை அடிப்பதை நாம் பார்க்க அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த 2020 முதல் 2022 வரை முறையே 440, 478, 483 என ஒவ்வொரு வருடத்திலும் முன்னேற்றத்தைக் கண்டு 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வரும் சுப்மன் கில் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் நிச்சயமாக இந்த வருடம் 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:வீடியோ: மிரட்டிய உம்ரான், தரத்தை காட்டிய நடராஜன் – ஜெய்ஸ்வால், பட்லர் சரவெடியால் பவர் பிளேவில் சாதனை படைத்த ராஜஸ்தான்

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் நடைபெறும் தன்னுடைய 2வது லீக் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை குஜராத் எதிர்கொள்ள தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement