அவருக்கு அறிவுரை வழங்கும் உரிமை நமக்கில்லை, 100 என்ன 105 சதங்கள் அடிப்பார் – விராட் கோலிக்கு இந்திய வீரர் மெகா ஆதரவு

Kohli
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் அதிக சதங்கள் அடித்த வீரராக ஏற்கனவே தன்னை ஒரு ஜாம்பவானாக நிரூபித்துள்ளார். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் 2019 முதல் சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவர் அதிலிருந்து விடுபடுவதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த அழுத்தமான கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார்.

Kohli

- Advertisement -

அதனால் சுதந்திர பறவையாக விளையாடத் தொடங்கிய அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களைக் கூட தாண்டாது என முன்பை விட சுமாராக செயல்படுகிறார். அதனால் பொறுமையிழந்த ஜாம்பவான் கபில்தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் எப்போது சதமடிப்பார் என்ற விமர்சனத்தை விட்டுவிட்டு எத்தனை நாட்கள் ரன்களை அடிக்காமல் காலத்தை தள்ளுவீர்கள் என்ற வகையில் அணியிலிருந்து நீக்குமாறு கேட்கத் தொடங்கி விட்டனர்.

உத்தப்பாவின் ஆதரவு:
இருப்பினும் சாதாரண வீரர்கள் 70 சதங்களை அடிக்க முடியுமா, வரலாற்றில் ஜாம்பவான்கள் என்ற பெயரில் விளையாடிய எத்தனையோ வீரர்கள் விராட் கோலி செய்துள்ள சாதனைகளை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்ற வகையில் கிரேம் ஸ்வான், கெவின் பீட்டர்சன், சோயப் அக்தர் உட்பட நிறைய வெளிநாட்டு வீரர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் கடினமான நேரத்தில் ஆதரவு கொடுத்தால் தான் அவரால் பார்முக்கு திரும்ப முடியும் என்ற வகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆதரவு தெரிவித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

kohli

இப்படி விமர்சனத்திற்கு மிஞ்சிய ஆதரவுகளை பெற்று வரும் விராட் கோலிக்கு மற்றொரு இந்திய வீரர் ராபின் உத்தப்பா தனது ஆதரவை வழங்கியுள்ளார். 31 வயதிலேயே 70 சதங்களை அடித்த அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை தூளாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்மின்றி தவிக்கிறார். ஆனால் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வந்து மேற்கொண்டு 30 – 35 சதங்களை அடிப்பார் என்று தெரிவிக்கும் ராபின் உத்தப்பா இது பற்றிய சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து சதத்திற்கு மேல் சதமடித்த போது நாம் யாரும் அப்படி விளையாட வேண்டும் என்று கூறவில்லை. எனவே தற்போது அவர் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு உரிமையில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே 70 சதங்கள் அடித்துள்ள அவரின் திறமைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அதே திறமையால் அவர் இன்னும் 30 – 35 சதங்கள் நிச்சயமாக அடிப்பார்”

Uthappa

“அதற்கு அவரை நாம் சுதந்திரமாக விளையாட விட்டாலே போதும். நமக்கு எது வேலை செய்யும் என்று அவருக்கு தெரியும். ஒருமுறை அவர் தன்னுடைய சுமாரான பார்முக்கான பிரச்சனையை கண்டறிந்து விட்டால் தனக்கு தானே சரி செய்து கொள்வார் என்று நம்புகிறேன். எனவே இந்த தருணத்தில் அவருக்கு சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பை கொடுப்பதே நாம் செய்ய வேண்டியதாகும்” என்று கூறினார்.

நமக்கு உரிமையில்லை:
மேலும் ஓடிஓடி ஏற்பட்ட களைப்பு ஆட்டத்தில் தெரிவதால் அதிலிருந்து விடுபட சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனைகள் கொடுத்தனர். ஆனால் அதை ஏற்காமல் விளையாடினால் தானே பார்முக்கு வரமுடியும் என்று பதிலளித்த விராட் கோலி கூறியதுபோல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து தொடரில் விளையாடி விட்டு தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்கிறார். இதுவே ஐபிஎல் தொடரா இருந்தால் ஓய்வெடுப்பார் என்று அதற்கு தனியாக விமர்சனங்களை எழுப்பியவர்களுக்கு ராபின் உத்தப்பா கொடுத்த பதிலடி பின்வருமாறு.

Kohli-1

“ஒருவேளை அவர் தனக்கு ஓய்வு தேவை என்று உணர்ந்தால் அவரே அதை எடுத்துக் கொள்வார். அவர் ஏதேனும் ஒரு தொடரில் விளையாட விரும்பினால் அவருக்கு அனுமதி அளியுங்கள். அணியில் அவரின் இடத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பாதீர்கள். ஏனெனில் அவர் தனது திறமைகளை நிரூபித்த உலகின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர். அவரின் போட்டியை வெல்லக்கூடிய திறமைகளையும் அணியில் அவருக்கான இடத்தையும் பற்றி கேள்வி எழுப்புவதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று கூறினார்.

Advertisement