மெல்போர்ன் வந்து சேருவீங்களா? பைனலுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் இந்தியாவுக்கு சோயப் அக்தர் அறை கூவல்

Shoaib Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாபிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. அந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வலுவான நியூசிலாந்தை அசால்டாக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்ற சாதனை படைத்துள்ளது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 152/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை விட ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டு குறைந்தது 20 – 30 ரன்களை சேமித்த பாகிஸ்தானுக்கு பேட்டிங்கில் சுமாரான பார்மில் தவிக்கும் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இந்த முக்கிய போட்டியில் விஸ்வரூபம் எடுத்து 105 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அப்படி 3 துறைகளிலும் முக்கிய நேரத்தில் அபாரமாக செயல்பட்டுள்ள பாகிஸ்தான் தற்போது எதிரணிகளுக்கு சவாலான அணியாக மாறியுள்ளது.

- Advertisement -

மெல்போர்ன் வருவீங்களா:
அதை விட 1992ஆம் அண்டு இதே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இதே போல் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும் அதன்பின் மீண்டெழுந்து இம்ரான் கான் தலைமையில் கோப்பையை வென்றது போல் இம்முறையும் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் உறுதியாக நம்புகின்றனர். அத்துடன் இதே உலக கோப்பையில் முதல் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தோற்க வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் நாங்கள் பைனலுக்கு தகுதி பெற்று மெல்போர்ன் வந்து விட்டோம் நீங்களும் விரைவாக வந்து சேருங்கள் என்று வெற்றிக்கு பின் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதிலும் 1992இல் இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்றதை விட இம்முறை உங்களை தோற்கடித்து கோப்பையை வெல்வதற்காக காத்திருக்கிறோம் என்ற வகையில் அவர் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஹிந்துஸ்தான் (இந்தியா) நாங்கள் மெல்போர்ன் சென்றடைந்து விட்டோம். நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம். நீங்கள் இங்கிலாந்தை தோற்கடித்து மெல்போர்ன் வரவேண்டும் என்பதற்காக நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதே மெல்போர்னில் தான் 1992இல் இங்கிலாந்தை நாங்கள் தோற்கடித்தோம். ஆனால் இது 2022 என்பதால் வருடங்கள் மாறினாலும் எண்ணிக்கை ஒன்று தான்”

“எனவே நான் பைனலில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதை பார்க்க விரும்புகிறேன். நாம் மீண்டும் ஒரு முறை மோதி பார்ப்போம். நமக்கு இன்னொரு போட்டி தேவைப்படுகிறது. அதற்காக ஒட்டு மொத்த உலகமும் மூச்சை நிறுத்திக் கொண்டு காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார். முன்னதாக ஆரம்பத்தில் சந்தித்த தோல்விகளால் பாகிஸ்தான் இந்த வாரம் வெளியேறினால் இந்தியா செமி ஃபைனலுடன் அடுத்த வாரம் வெளியேறி விடும் என்று தெரிவித்த சோயப் அக்தர் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானார்.

இருப்பினும் அரையிறுதியில் பாகிஸ்தான் வென்று ஃபைனலுக்கு சென்று விடும் இந்தியா தான் இங்கிலாந்திடம் வெல்லுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக நேற்று முன் தினம் அவர் கூறியிருந்தார். தற்போது சொன்னது போலவே பாகிஸ்தான் பைனலுக்கு சென்று விட்டதால் எப்படியாவது அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்து விட்டு வாங்கள் என்று அறைகூவல் விடுக்கும் அவர் பைனலில் இந்தியாவை தோற்கடிக்க காத்திருப்பதாக வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement