IPL 2023 : மும்பை, சென்னைக்கு குறைஞ்சவங்க இல்ல, நாங்களும் அந்த சாதனை செஞ்சுருக்கோம் – ஆர்சிபி கிண்டல்களுக்கு விராட் பதிலடி

kohli
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த சீசனை வெற்றியுடன் துவக்கியுள்ளது. புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ரோகித் சர்மா 1, இசான் கிசான் 10, சூரியகுமார் யாதவ் 15 என முக்கிய வீரர்களின் சொதப்பலால் 48/4 என தடுமாறினாலும் 9 பவுண்டரி 4 சிக்சரை விளாசி 84* (46) ரன்கள் குவித்த திலக் வர்மாவின் உதவியுடன் 20 ஓவரில் 171/7 ரன்கள் எடுத்தது.

Kohli

அதை துரத்திய பெங்களூருக்கு சுமாராக பந்து வீசிய மும்பையை அடித்து நொறுக்கி 148 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 73 (43) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 82* (49) ரன்களும் குவித்து 16.2 ஓவரிலேயே எளிதான வெற்றி பெற வைத்தனர். அதனால் அதிரடி வெற்றி பெற்ற பெங்களூரு தங்களது லட்சிய கனவு முதல் கோப்பையை வெல்லும் பயணத்தை 16வது முறையாக இந்த சீசனிலும் வெற்றியுடன் துவங்கியுள்ளது.

- Advertisement -

குறைஞ்சவங்க இல்ல:
ஏனெனில் கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் கடந்த 15 வருடங்களில் லீக் சுற்றில் அசத்தும் பெங்களூரு நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பி வெற்றியையும் கோப்பையையும் எதிரணிக்கு தாரை வார்த்து வருகிறது. குறிப்பாக அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி ஆகியோரது தலைமையில் 2009, 2011, 2016 சீசன்களில் ஃபைனல் வரை சென்றும் கோப்பையை வெல்ல தவறியதால் மேற்கே சூரியன் உதித்தாலும் ஆர்சிபி மட்டும் சாம்பியன் பட்டம் வெல்லாது என்று கடந்த பல வருடங்களாக உச்சகட்ட கிண்டல்களை சந்தித்து வருகிறது.

MI vs CSk

இந்நிலையில் 8 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூரு 5 கோப்பைகளை வென்ற மும்பை 4 கோப்பைகளை வென்ற சென்னை ஆகிய அணிகளுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்று விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை நான் நீண்ட நாட்களாக சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். மும்பை 5 கோப்பைகளையும் சென்னை 4 கோப்பைகளையும் வென்றுள்ள நிலையில் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற 3வது அணியாக உள்ளோம் – 8 முறை”

- Advertisement -

“நாங்கள் குறிப்பிட்ட சமயத்தில் ஒரு போட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் சமமான அணியுடன் விளையாட முயற்சிக்கிறோம். அந்த வகையில் இந்த போட்டியில் எங்களுடைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினோம். மேலும் 4 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் விளையாடுவது சிறந்த தருணமாக இருக்கிறது. இதை விட எங்களுக்கு வேறு நல்ல போட்டி இருக்காது. சின்னசாமி மைதானம் முழுவதும் ஒவ்வொரு இருக்கையும் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது”

Virat Kohli

“அந்த நிலையில் வெற்றியுடன் இத்தொடரை துவங்கியுள்ள எங்களுக்கு ரசிகர்கள் முழு ஆதரவை கொடுப்பது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல மும்பை, சென்னை ஆகிய அணிகளுக்கு பின் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற 3வது அணியாக சாதனை படைத்துள்ள பெங்களூரு ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி, அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடியை கொண்ட அணி, அதிக சதங்கள் அடித்த அணி உட்பட பல்வேறு சாதனைகளையும் பெருமைகளையும் கொண்ட அணியாகவே செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:RCB vs MI : மும்பையை பந்தாடிய கிங் கோலி – ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக இரட்டை வரலாற்று சாதனை

எனவே ஒரு கோப்பையை வெல்லவில்லை என்பதற்காக அந்த அணியை மோசம் என்று சொல்லவே முடியாது. முன்னதாக விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை பெங்களூரு கோப்பை வெல்ல முடியாது என்ற கிண்டல்கள் காணப்பட்ட நிலையில் தற்போது பதவி விலகி சாதாரண வீரராக விளையாடும் அவர் சுதந்திர பறவையாக முன்பை விட அதிரடியாக விளையாட துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement