மறக்க முடியாத 6 சிக்ஸர்கள் – பழைய நினைவை ஸ்பெஷல் பார்ட்னருடன் இணைந்து பார்த்த யுவி, வாழ்த்தும் ரசிகர்கள்

- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ளது. என்னதான் ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடர்கள் வந்தாலும் உலக்கோப்பைக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது. அதற்கு முன்னோடியாக கடந்த 2007இல் வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் யாருமே எதிர்பாராத வகையில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா ஒவ்வொரு போட்டியிலும் மேஜிக் நிகழ்த்தி பைனலில் பரம எதிரியான பாகிஸ்தானை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.

அந்த தொடரின் முதல் போட்டியிலேயே பவுல் அவுட் என்ற வித்தியாசமான வெற்றியில் துவங்கி பைனலில் மிஸ்பாவின் மிரட்டலை தாண்டி திரில் வெற்றி பெற்றது முதல் ஒவ்வொரு தருணமும் காலத்திற்கும் மறக்க முடியாத ஒன்றாக இந்திய ரசிகர்களுக்கு அமைந்தது. அந்த அற்புதமான நினைவுகளில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டு படைத்த உலக சாதனை முதன்மையானதாகும்.

- Advertisement -

சிக்ஸர்கள் மழை:
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கௌதம் கம்பீர் 58, வீரேந்திர சேவாக் 68 என தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்து 136 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் களமிறங்கிய ராபின் உத்தப்பா 6 (4) ரன்களில் அவுட்டானதால் அடுத்ததாக களமிறங்கிய யுவராஜ் சிங் 6 பந்துகளில் 14* ரன்கள் எடுத்திருந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஆண்ட்ரூ பிளின்டாஃப் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்த பவுண்டரிகளை யுவராஜ் சிங் அடித்திருந்தார்.

அதனால் கடுப்பான பிளின்டாப் ஓவர் முடிந்தபின் யுவராஜ் சிங்கிடம் சென்று உங்களது குரல்வளையை கடித்து விடுவேன் என்ற வகையில் ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கு வாயால் தேவையான பதிலடி கொடுத்த யுவராஜ் சிங் அதோடு நிற்காமல் அடுத்ததாக ஸ்டூவர்ட் பிராட் வீசிய 19வது ஓவரில் 6, 6, 6, 6, 6, 6 என 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு வானவேடிக்கை நிகழ்த்தி பேட்டாலும் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அன்றைய நாளில் பிளின்டாப் இழுத்த வம்புக்கு ஸ்டூவர்ட் ப்ராட் பலி கடான நிலையில் 20 ஓவர்களில் இந்தியா எடுத்த 218/4 ரன்களை துரத்திய இங்கிலாந்து 20 ஓவர்களில் 200/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் டி20 உலகக் கோப்பையிலும் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன், அதிவேகமாக அரைசதம் (12 பந்துகள்) அடித்த பேட்ஸ்மேன், ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆகிய 3 உடைக்க முடியாத உலக சாதனைகளை படைத்தார்.

மகனுடன் யுவி:
இந்நிலையில் 2007 செப்டம்பர் 19ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த வரலாற்று நிகழ்வின் 15வது வருடத்தை இன்று ஐசிசி முதல் ரசிகர்கள் வரை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வரலாற்றில் அன்றைய நாளில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய அவருடைய ஆட்டத்தை ரவி சாஸ்திரி வர்ணனையுடன் இப்போது பார்க்கும்போது கூட ரசிகர்களுக்கு புல்லரிப்பு ஏற்படுகிறது.

- Advertisement -

அந்த வரலாற்று நிகழ்வை இன்று தன்னுடைய 9 மாத மகன் ஓரியன் கீச் சிங்கை தனது மடியில் அமர வைத்துக்கொண்டு மிகப்பெரிய தொலைக்காட்சியில் பார்த்த யுவராஜ் சிங் “15 வருடம் கழித்து இந்த தருணத்தை பார்க்க இவரை விட சிறந்த பார்ட்னர் கிடைக்க மாட்டார்” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது தந்தை இங்கிலாந்தை புரட்டி எடுப்பதை கண் சிமிட்டாமல் அந்த செல்ல குழந்தை பார்க்கும் போது ஒவ்வொரு சிக்சர் அடித்த பின்பும் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு யுவராஜ் சிங் கொண்டாடும் வீடியோ தற்போது சமூக அவலங்களை வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் ஏற்பட்ட பிரச்சனையை டி20 உலக கோப்பையில் தவிர்க்க பிசிசிஐ அதிரடி முடிவு – முழுவிவரம்

அதை பார்க்கும் ரசிகர்கள் வருங்காலங்களில் “குட்டி யுவியும்” இதேபோல் இந்தியாவுக்காக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். அப்படி ஏராளமான சாதனைகளை படைத்த யுவராஜ் சிங் கடந்த 2019இல் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ரோட் சேஃப்டி தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement