- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜடேஜா இல்லனா என்ன, ராக்கெட் வேகத்தில் சீறிப்பாய்ந்த கிங் கோலி – வெற்றி பெற வைத்த 2 பீல்டிங்

சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் துவங்கிய வரலாற்றின் 8வது ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் அங்கு வலைப்பயிற்சிகளை மேற்கொண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்கேற்ற 2 பயிற்சி போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை பதிவு செய்த இந்தியா ஐசிசி நடத்தும் அதிகாரபூர்வ பயிற்சி போட்டிகளில் தன்னுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அக்டோபர் 17ஆம் தேதியன்று பிரிஸ்பேன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற காபா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் போராடி 186/7 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் ரோகித் சர்மா 15 (14) விராட் கோலி 19 (13) ஹர்திக் பாண்டியா 2 (5) தினேஷ் கார்த்திக் 20 (14) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டிய கேஎல் ராகுல் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (33) ரன்களும் 4வது இடத்தில் களமிறங்கி அசத்திய சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 50 (33) ரன்களும் விளாசினர். அதைத்தொடர்ந்து 187 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அதிரடியான தொடக்கம் கொடுத்த மிட்சேல் மார்ஷ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (18) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

சிறுத்தையாக கிங் கோலி:
இருப்பினும் மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித் 11 (12) கிளன் மேக்ஸ்வெல் 23 (16) மார்கஸ் ஸ்டோனிஸ் 7 (7) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். ஆனாலும் மற்றொருபுறம் நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (54) ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 16 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில் 19வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் ஆரோன் பின்ச்சை போல்ட்டாக்கி திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

அதைவிட அடுத்த பந்திலேயே பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றியை பெற்றுத் தரக்கூடிய டிம் டேவிட் சிங்கிள் எடுக்க முயற்சித்த போது ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலி சிறுத்தையாக சீறிப் பாய்ந்து பந்தை பிடித்து ஓடியவாரே ஸ்டம்பை குறி பார்த்து அடித்து ரன் அவுட் செய்தார். அதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது ஆச்சர்யப்படும் வகையில் முதல் முறையாக பந்து வீசிய முகமது ஷமி முதலிரண்டு பந்துகளில் தலா 2 ரன்களை கொடுத்தார். ஆனால் 3வது பந்தை பட் கமெண்ட்ஸ் லாங் ஆன் திசையை நோக்கி சிக்ஸர் அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

இருப்பினும்பவுண்டரி எல்லை அருகே சூப்பர்மேன் போல் காத்துக்கொண்டிருந்த விராட் கோலி சரியான டைமிங் கொடுத்து தாவி வெறும் ஒற்றை கையில் சிக்ஸரை தடுத்து கேட்ச் பிடித்தார். அதை பார்த்து பட் கமின்ஸ் ஆச்சரியப்பட்டதை போலவே பெவிலியனில் அமர்ந்திருந்த டேவிட் வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலியர்களும் வர்ணனையாளர்களும் வியந்து போய் பாராட்டினார்கள். அதன்பின் அடுத்த பந்தில் அஸ்டன் அகரை ரன் அவுட் செய்த முகமது சமி கடைசி 2 பந்துகளில் ஜோஸ் இங்கிலீஷ் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரையும் அவுட் செய்தார்.

அதனால் 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா ஆல் அவுட் செய்து அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 19, 20 ஆகிய ஓவர்களை வீசிய ஹர்ஷல் படேல், முஹம்மது ஷமி ஆகியோர் பந்து வீச்சில் போட்டியை மாற்றினார்கள் என்றால் அவர்களுக்கு உறுதுணையாக அபாரமாக ஃபீல்டிங் செய்த விராட் கோலி வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

சமீப காலங்களில் டெத் ஓவர்களில் இந்தியாவின் பவுலிங் மற்றும் மோசமான பீல்டிங் தோல்விகளை கொடுத்ததால் நிறைய விமர்சனங்கள் நிலவுகின்றன. ஆனால் இப்போட்டியில் அவை இரண்டிலும் முன்னேறி வெற்றி பெற்ற இந்தியாவுக்கு காயத்தால் வெளியேறிய உலகின் நம்பர்-1 ஃபீல்டராக கருதப்படும் ரவீந்திர ஜடேஜா இல்லாத குறையைப் போக்கும் வகையில் நான் இருக்கிறேன் என்று விராட் கோலி ஃபீல்டிங்கில் அசத்தலாக செயல்பட்டது இந்திய ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

- Advertisement -
Published by