என்னப்பா நீயெல்லாம் இப்டி பவுலிங் போடுற – இந்திய வீரரை கலாய்க்கும் வகையில் ஜாலியாக சிரித்த விராட் கோலி

virat kohli smile
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் வென்ற இந்தியா அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் முதன்மை அணி விளையாடிய தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஜனவரி 15ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சம்பிரதாய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 390/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சுப்மன் கில் சதமடித்து 116 ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 166* ரன்களும் குவித்தனர்.

அதை துரத்திய இலங்கை அனலாகப் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 22 ஓவர்களில் வெறும் 73 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 13 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்து அசத்தியது.

- Advertisement -

கலாய்த்த கோலி:
முன்னதாக இப்போட்டி நடைபெற்ற கிரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து பகல் நேர சூழ்நிலைகளை கச்சிதமாக பயன்படுத்தி எந்த இடத்திலும் சுணங்காமல் கடைசி வரை அதிரடியாகவே விளையாடியதால் 390 ரன்கள் எளிதாக குவிக்க முடிந்தது. அப்போது ஒருவேளை இப்போட்டியின் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருந்ததோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து அற்புதமாக பந்து வீசியது என்பது 2வது இன்னிங்ஸில் நிரூபணமானது.

ஏனெனில் 2வது இன்னிங்ஸ்சில் பவுலிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி துல்லியமாக பந்து வீசிய முகமது சிராஜ் 4, ஷமி 2, குல்தீப் யாதவ் 2 என 5 பவுலர்களுக்கு பதில் 3 முதன்மை பவுலர்களே அற்புதமாக பந்து வீசி இலங்கையின் கதையை முடித்தனர். இருப்பினும் 8 விக்கெட்டுகள் விழுந்த போது ரஜிதா மற்றும் வெல்லலேகே ஆகியோர் எப்படியாவது 100 ரன்களை தொட வேண்டும் என்ற முயற்சியில் 9வது விக்கெட்டுக்கு 22 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்தனர்.

- Advertisement -

குறிப்பாக அவர்கள் முதன்மை பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டதை கவனித்த கேப்டன் ரோகித் சர்மா அந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க வித்யாசமாக யோசிப்போம் என்று ஸ்ரேயாஸ் ஐயரை பயன்படுத்தினார். பொதுவாகவே அரிதாக பவுலிங் செய்யும் அவர் ஆஃப் ஸ்பின்னராக வீசிய முதல் பந்திலேயே பிட்ச் ஆனதும் பந்து எதிர்பாராத அளவுக்கு சுழன்று பேட்ஸ்மேனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

அதை பிடித்த ராகுல் ஆச்சரியமடைந்ததை விட முதல் ஸ்லிப் பகுதியில் கேட்ச் பிடிப்பதற்காக நின்று கொண்டிருந்த விராட் கோலி “என்னப்பா நீயெல்லாம் வீசும் பந்து கூட இவ்வளவு சுழலுமா” என்ற வகையில் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் குழந்தை போல வாயில் கை வைத்து கலாய்க்கும் வகையில் சிரித்தார். அதை பார்த்த ஷ்ரேயஸ் ஐயர் “அதான்ணே எனக்கும் தெரியல” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்து சிரித்துக் கொண்டே அடுத்த பந்தை வீச சென்றார். இருப்பினும் அடுத்த ஓவரிலேயே விக்கெட் விழுந்த காரணத்தால் மேற்கொண்டு அவர் பந்து வீசவில்லை.

இதையும் படிங்க: IND vs SL : விருதுலாம் முக்கியம் இல்ல. எனக்கு முக்கியம் இந்த ஒரு விஷயம் தான் – விராட் கோலி நெகிழ்ச்சி

முன்னதாக ஒரு காலத்தில் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது சச்சின், சேவாக் போன்ற பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பவுலர்களாக மாறி விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்கள். அந்த நிலைமை தற்போதைய இந்திய அணியில் இல்லை என்று சமீப காலங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு தீர்வு காணும் வகையிலும் ரோகித் சர்மா இந்த முயற்சி செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement