
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. இருப்பினும் அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியாவை 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கி தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா போராடி 49 ஓவரில் 269 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை எடுத்தனர். அதை தொடர்ந்து 270 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 30, சுப்மன் கில் 37, விராட் கோலி 54, கேஎல் ராகுல் 32 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் குறைவான ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலையில் அக்சர் படேல் 2 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் சூரியகுமார் யாதவ் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாக்கி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.
மாஸ் பதிலடி:
இறுதியில் ஹர்திக் பாண்டியா 40, ரவீந்திர ஜடேஜா 18 என முக்கிய வீரர்களை பினிஷிங் செய்யவிடாமல் குறைவான ரன்களில் அவுட்டாக்கிய ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். அதனால் 49.1 ஓவரில் இந்தியாவை 248 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. அத்துடன் 2019க்குப்பின் தொடர்ந்து சொந்த மண்ணில் வென்று வந்த இந்தியாவை 2 – 1 (3) என்ற கணக்கில் ஒரு ஒருநாள் தொடரில் தோற்கடித்த ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் இடத்தையும் தன்வசமாக்கி சாதனை படைத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டான பின் களமிறங்கிய விராட் கோலி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே சூரியகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டானது போட்டியில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி தோல்வியையும் கொடுத்தது. அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் 21வது ஓவரை வீசிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு பந்தை வீசிய பின் விராட் கோலியை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தார்.
ஆனால் எப்போதுமே எதிரணிகளை தெறிக்க விடக்கூடிய விராட் கோலி அவரது முறைப்புக்கு அஞ்சாமல் “நீங்கள் படித்த ஸ்கூலில் நான் ஹெட் மாஸ்டர்” என்பது போல் நேரடியாக நேருக்கு நேர் சென்று அவரது நெஞ்சோடு நெஞ்சுடன் முரட்டுத்தனமாக மோதி சிங்கத்தை போல் பதிலுக்கு முறைத்து மாஸ் பதிலடி கொடுத்தார். அதனால் இவரை ஏன் முறைத்தோம் என்பது போல் விராட் கோலியை திரும்பி பார்க்காத ஸ்டோய்னிஸ் லேசாக சிரித்துக்கொண்டே சென்றார்.
அப்படி எதிரணிக்கு பதிலடி கொடுத்து முடிந்த வரை வெற்றிக்கு போராடிய விராட் கோலி இந்த போட்டியில் குவித்த 54 ரன்கள் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர் என்று ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 6976 (இந்திய மண்ணில்)
2. விராட் கோலி : 5443* (இந்திய மண்ணில்)
3. ரிக்கி பாண்டிங் : 5406 (ஆஸ்திரேலிய மண்ணில்)
இதையும் படிங்க:IND vs AUS : 2016 முதல் இந்தியாவை சொந்த மண்ணில் அடக்கிய ஒரே அணியாக மிரட்டும் ஆஸி – மணிமகுடத்தையும் பறித்து சாதனை
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக அரை சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற தென்னாபிரிக்கா ஜாம்பவான் ஜேக் காலிஸ் சாதனையை தகர்த்து அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 58
2. விராட் கோலி : 47*
3. ஜேக் காலிஸ் : 46