155 கி.மீ வேகத்தில் இலங்கை கேப்டனை அவுட்டாக்கிய உம்ரான் மாலிக் – பும்ராவை மிஞ்சி புதிய வரலாற்று சாதனை

- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்தியா ஜனவரி 3ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் கடுமையாக போராடி 162/5 ரன்கள் சேர்த்தது. சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 7, சஞ்சு சாம்சன் 5 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் இஷான் கிசான் 37 (29) ரன்களும் கேப்டன் பாண்டியா 29 (27) ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள்.

அதனால் 94/5 என சரிந்த இந்தியா 150 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து டெத் ஓவர்களில் இலங்கை பவுலர்களை பந்தாடிய தீபக் ஹூடா 1 பவுண்டரி 4 சிக்சருடன் 41* (23) ரன்களும் அக்சர் பட்டேல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31* (20) ரன்களும் குவித்து காப்பாற்றினார்கள். அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய இலங்கையும் இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சில் நிஷாங்கா 1, டீ சில்வா 8, அஸலங்கா 12, ராஜபக்சா 10, குசால் மெண்டிஸ் 28 என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து ஆரம்பத்திலேயே 68/5 என தடுமாறியது.

- Advertisement -

வேகத்தில் சாதனை:
இருப்பினும் மிடில் ஓவர்களில் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற வகையில் 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட வணிந்து ஹசரங்கா 21 (10) ரன்களை அதிரடியாக குவித்து அவுட்டான போதிலும் மறுபுறம் நங்கூரமாக நின்று கொண்டிருந்த கேப்டன் தசூன் சனாக்கா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 45 (27) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். குறிப்பாக 17வது ஓவரை வீசிய இந்தியாவின் எக்ஸ்பிரஸ் பவுலர் உம்ரான் மாலிக்கின் 4வது பந்தில் அவர் அதிரடியாக மற்றுமொரு பவுண்டரியை அடிக்க முயற்சித்தார்.

ஆனால் 155 கி.மீ வேகத்தில் வந்த அந்த பந்து அவர் பேட்டை சுழற்றிய வேகத்தையும் மிஞ்சியதால் பவுண்டரிக்கு பதிலாக கேட்ச்சாக மாறி நேராக கவர் திசை நோக்கி சென்றது. அதை அங்கு நின்று கொண்டிருந்த சஹால் கச்சிதமாக பிடித்ததால் இலங்கை கேப்டனை காலி செய்த உம்ரான் மாலிக் போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் சமிகா கருணரத்னே 2 சிக்ஸருடன் 23* (16) ரன்கள் குவித்து போராடியதால் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது இலங்கை 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

குறிப்பாக கடைசி ஓவரை தில்லாக வீசிய அக்சர் படேல் 10 ரன்கள் மட்டும் கொடுத்து கட்டுக்கோப்புடன் செயல்பட்டதால் 20 ஓவர்களில் இலங்கையை 160 ரன்களுக்கு அவுட்டாக்கிய இந்தியா திரில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று புத்தாண்டை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக அறிமுக வீரர் சிவம் மாவி 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய நிலையில் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றிய தீபக் ஹூடா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அவர்களை போலவே தன்னுடைய அதிரடியான வேகத்தில் இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடித்த உம்ரான் மாலிக் 4 ஓவரில் வெறும் 27 ரன்களை 6.75 என்ற சிறப்பான எக்கனாமியில் வீசி 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து இந்தியாவின் வெற்றியில் தனது சிறப்பான பங்கை ஆற்றினார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 150+ கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரது பாராட்டை பெற்று இந்தியாவுக்காகவும் அறிமுகமானார். இருப்பினும் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றாமல் 2 போட்டியுடன் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்கவீடியோ : கதை முடிந்ததாக நினைத்த கடைசி ஓவரை தில்லாக வீசி த்ரில் வெற்றி பெற வைத்த அக்சர் படேல் – ரசிகர்கள் பாராட்டு

அந்த வகையில் வேகத்தில் மிரட்டும் அவர் இப்போட்டியில் இலங்கை கேப்டன் சானக்காவை 155 கி.மீ வேகத்தில் அவுட்டாக்கிய பந்தால் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற பும்ராவின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன் கடந்த 2018 – 19 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 153.36 கி.மீ வேகத்தில் வீசியதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் இந்தியாவுக்கு தரமான எக்ஸ்பிரஸ் பவுலர் வளர்ந்து வருவதை நினைத்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

Advertisement