தனது ஆல் டைம் சாதனையை அசால்ட்டாக சமன் செய்த உமேஷ் யாதவின் அதிரடி பேட்டிங்கை கொண்டாடிய விராட் கோலி

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது போட்டி மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கியது. முதலிரண்டு போட்டிகளில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் மறுபுறம் ஏற்கனவே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ள ஆஸ்திரேலியா ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ளும் முனைப்புடன் இப்போட்டியில் முதல் நாளிலேயே எதிர்பாராத அளவு சுழன்ற பிட்ச்சில் தரமாக பந்து வீசி இந்தியாவை வெறும் 109 ரன்களுக்கு சுருட்டியது.

ரோஹித் சர்மா 12, சுமன் கில் 21, புஜாரா 1, ஸ்ரேயாஸ் ஐயர் 0, ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத் 17 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

கொண்டாடிய கோலி:
ஆனால் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் தனது தரத்துக்கு தகுதியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை முன்னிலைப்படுத்தி 31 ரன்களில் அவுட்டானார். அவருடன் இணைந்து பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவஜாவை 60 ரன்களில் அவுட்டாக்கிய ஜடேஜா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையும் 26 ரன்களில் காலி செய்தார். இருப்பினும் முதல் நாள் முடிவில் 156/4 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இப்போட்டியில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா 100 ரன்களை தாண்டுமா என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டது. அப்போது 10வது இடத்தில் களமிறங்கிய உமேஷ் யாதவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 17 (13) ரன்களை 130.77 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி 100 ரன்களை தாண்டுவதற்கு உதவி செய்து முக்கிய அவமானத்தை சந்திப்பதிலிருந்து காப்பாற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நேதன் லயன் வீசிய 30வது ஓவரில் ஸ்லாக் ஸ்வீப் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடித்த அவர் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்தார்.

- Advertisement -

அவரது ஆட்டத்தால் 100 ரன்கள் இந்தியா கடந்ததை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சியுடன் கைதட்டி பாராட்டினார். ஆனால் சிக்ஸர் அடித்த போது அவருக்கு பின்புறத்தில் அமர்ந்திருந்த விராட் கோலி எகிறி குதிக்காத குறையாக துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கைதட்டி பாராட்டினார். இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி தனது கேரியரில் இது வரை விளையாடிய 177 இன்னிங்ஸில் வெறும் 24 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

ஆனால் டெயில் எண்டராக பொதுவாக 9, 10 ஆகிய லோயர் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கும் உமேஷ் யாதவ் இதுவரை களமிறங்கிய 63 இன்னிங்ஸிலேயே 24 சிக்ஸர்களை பறக்க விட்டு விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை அசால்டாக சமன் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் சிக்ஸர் கிங் என்று அழைக்கப்படும் யுவராஜ் சிங் (22) மற்றும் ரவி சாஸ்திரி (22) ஆகியோரை விட உமேஷ் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் தோனியை போன்ற கேப்டனாக இருக்கப்போவதில்லை. வெளிப்படையாக பேசிய – ஆர்.சி.பி கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட வீரர் என்ற உலக சாதனையை ஏற்கனவே படைத்துள்ள உமேஷ் யதாவின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பாக இயற்கை எய்தினார். அதற்காக அணியிலிருந்து விலகி தனது கடமைகளை செய்து விட்டு மீண்டும் வந்துள்ள அவர் சோகத்தையும் மறந்து விட்டு இந்தியாவுக்காக அசத்தலாக செயல்பட்டு வருவது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement