1080 டிகிரியில் சூறாவளியாக சுழன்றடித்த சூரியகுமார் புதிய வரலாற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள்

Suryakumar YAdav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதியன்று சம்பிரதாய கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 186/5 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 15 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி 26 (25) ரன்களிலும் கேஎல் ராகுல் அதிரடியாக 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51 (35) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது வந்த ரிஷப் பண்ட் 3 (5) ரன்களில் நடையை கட்டிய நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய சூரியகுமார் 5வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் அவரைப் போல் அதிரடி காட்ட முடியாமல் தவித்த ஹர்திக் பாண்டியா 18 (18) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

1080 டிகிரியில்:
இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61* (25) ரன்களை 244.00 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 187 ரன்கள் துரத்திய ஜிம்பாப்வே முதல் பந்திலிருந்தே தரமாக பந்து வீசிய இந்திய பவுலர்களிடம் அதிரடி காட்ட முடியாமல் 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரியன் பர்ல் 35 (22) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார்.

அதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா குரூப் 1 புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 61* (25) ரன்கள் குவித்த சூரியகுமார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பொதுவாகவே சூழ்நிலை எப்படியிருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே பட்டையை கிளப்பும் சூப்பர் ஸ்டார் ஸ்டைலை பின்பற்றும் அவர் இப்போட்டியில் மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடித்தது அத்தனை பேரையும் வியந்து பாராட்ட வைத்தது.

- Advertisement -

அதிலும் ஒய்ட் போல் வந்த பந்தை பின்னங்காலை அப்படியே வைத்து முன்னங்காலை ஆஃப் சைட் திசைக்கு கொண்டு வந்து அப்படியே பின்புறத்தில் அசால்டாக பறக்க விட்ட அவரது சிக்ஸர் பார்த்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் கொண்டாடுவதற்கு எடுத்துக்காட்டாக இப்போட்டியில் ஆஃப் சைட் திசை, ஸ்கொயர் லெக் திசை உட்பட அனைத்து புறங்களிலும் தெறிக்க விட்ட சூரியகுமாரை லசித் மலிங்கா, சச்சின் டெண்டுல்கர், இயான் பிசப், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் என அத்தனை பேரும் வியந்து தங்களது ட்விட்டரில் பாராட்டினார்கள்.

அதிலும் 1080 டிகிரியில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டுமென்று சூரியகுமார் காட்டியதாக இந்திய ரசிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கமான “பாரத் ஆர்மி” மெய்சிலிர்ந்து பாராட்டியுள்ளது. அத்துடன் “சூப்பர் சூர்யா” என்று ஐசிசி அதிகாரப்பூர்வ பக்கமும் மனதார பாராட்டியது. தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் இதே போல் பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை முந்தி சமீபத்தில் சாதனை படைத்தார்.

1. அந்த நிலையில் இந்த வருடம் சக்கை போடு போட்டு வரும் அவர் இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. சூரியகுமாரி யாதவ் : 1026*
2. முகமது ரிஸ்வான் : 924*
3. விராட் கோலி : 731*

2. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார். இதற்கு முன் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட எந்த இந்திய வீரரும் ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ரன்கள் குவித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement