வீடியோ : என்னையா டெஸ்ட் பிளேயர்னு ஒதுங்குனீங்க, அதிர்ஷ்ட சிக்ஸருடன் சம்பவம் செய்த ஸ்மித் – ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடரில் 2022/23 சீசனின் லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதில் ஜனவரி 17ஆம் தேதியன்று நடைபெற்ற 45வது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற அடிலெய்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சிட்னி அணிக்கு ஜோஸ் பிலிப் ஆரம்பத்திலேயே 1 ரன்னில் அவுட்டாகிய ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் அடுத்து வந்த க்ருட்டீஸ் பேட்டர்சனுடன் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே மிகவும் மெதுவாக விளையாடக் கூடிய அவர் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக வேகமாக ரன்களை சேர்ப்பவராக தன்னை அடையாளப்படுத்தியதில்லை. ஆனால் அதற்கு விதிவிலக்காக இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்ட அவர் விரைவாக அரை சதம் கடந்து மிரட்டினார். அவருடன் மறுபுறம் நங்கூரமாக நின்று 2வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய பேட்டர்சன் தனது பங்கிற்கு 3 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி:
அவருடன் அற்புதமாக பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் 90களை நெருங்கிய போது கொஞ்சமும் பயப்படாமல் சிக்சர் விளாசி பிக்பேஷ் தொடரில் தன்னுடைய முதல் சதத்தை அடித்து ரசிகர்களை மேலும் ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக கடந்த 12 வருடங்களாக பிக்பேஷ் தொடரில் விளையாடி வரும் அவர் முதல் முறையாக இப்போது தான் சதமடித்துள்ளார் என்பது மற்றுமொரு சிறப்பாகும். மேலும் பிக்பேஷ் தொடரில் 3 கோப்பைகளை வென்ற அணியாக திகழும் அடிலெய்ட் அணிக்காக சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

அப்படி அடுத்தடுத்து ஆச்சரியங்களுடன் சதமடித்த அவர் 5 பவுண்டரி 7 சிக்சருடன் 101 (56) ரன்களை 183.36 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ஆட்டமிழந்தார். இறுதியில் சில்க் 31* (16), டேன் கிறிஸ்டன் 15 (8) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் அடிலெய்ட் 203/5 ரன்கள் குவித்தது. அதைத் துரத்திய 204 ரன்களை துரத்திய சிட்னி ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து 19 ஓவரில் வெறும் 144 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 56 ரன்கள் எடுத்தார். அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அடிலெய்ட் அணியின் வெற்றிக்கு சந்தேகமின்றி முக்கிய பங்காற்றிய ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் வெறும் 2 ரன்னில் இருந்த அவர் எதிர்கொண்ட ஒரு பந்து அவரது கட்டுப்பாட்டையும் தாண்டி ஸ்டம்பில் மோதியது. இருப்பினும் பெய்ல்ஸ் கீழே விழாத காரணத்தால் அதிர்ஷ்டத்தை பயன்படுத்திய அவர் அபாரமான சதமடித்து தாம் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாட முடியும் என்பதை நிரூபித்தார். ஏனெனில் ஆரம்பம் முதலே நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு நிகராக சதங்களையும் ரன்களையும் விளாசி சாதனை படைத்து வரும் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் நிறைய முறை தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனால் கடந்த அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வாய்ப்பளித்த ஆஸ்திரேலிய நிர்வாகம் எஞ்சிய போட்டிகளில் பெஞ்சில் அமர வைத்தது. இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவரை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையில் முழுமையாக வாய்ப்பு வழங்காதது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: அந்த முடிவை கேப்டனாக விராட் கோலி எடுக்கல, சஞ்சு சாம்சன் தான் எடுத்தாரு – 2020 நிகழ்வை பகிர்ந்த ஸ்ரீதர்

இறுதியில் நடப்பு சாம்பியனாக விளையாடிய ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்க முடியாமல் வெளியேறிய நிலையில் தம்மால் டி20 கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என தற்போது ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்திற்கு ஸ்டீவ் ஸ்மித் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement