வீடியோ : அஷ்வின் சாய்க்க அஷ்வின் போலவே பந்து வீசும் பவுலரை எதிர்கொள்ளும் ஸ்மித் – ஆஸி வீரர்கள் வெறியுடன் பயிற்சி

Steve Smith Mahesh pithiya
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்ற இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் களமிறங்குவதற்கு தயாராகி வருகிறது. வரும் நவம்பர் 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கும் இத்தொடரில் குறைந்தது 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பெற முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த 2012க்குப்பின் கடந்த 10 வருடங்களாக உலகின் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது. அதை விட 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தலா 2 – 1 (4) என்ற கணக்கில் வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து பழி தீர்க்க வேண்டும் என்ற முழுமூச்சுடன் ஆஸ்திரேலியா போராட உள்ளது.

- Advertisement -

அஷ்வினை சாய்க்க:
மேலும் இம்முறையும் தோற்றால் அது ஹாட்ரிக் தோல்வியாகி விடும் என்பதால் எப்படியாவது இந்த தொடரில் வென்று சரித்திரம் படைத்து தங்களை உலகில் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்பதை நிரூபிப்பதற்காக ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. பொதுவாகவே இந்தியாவில் சுழல் பந்து வீச்சு அதிகமாக ஈடுபடும் என்பதால் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை வைத்து இத்தொடரில் களமிறங்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2017இல் இந்திய மண்ணில் விளையாடிய போது பயிற்சி போட்டியில் ஒரு வகையான மைதானமும் முதன்மை போட்டிகளில் ஒரு வகையான மைதானமும் கொடுக்கப்பட்டதால் இம்முறை இந்தியாவை நம்பாமல் சிட்னியில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் ஒரு பிட்ச்சை உருவாக்கி அதில் பயிற்சி எடுத்து விட்டு பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் இந்தியா வந்துள்ளனர்.

- Advertisement -

தற்போது பெங்களூருவில் இருக்கும் அவர்கள் அழுர் நகரில் வலைப்பயிற்சிகளை துவங்கியுள்ளனர். அந்த நிலையில் இந்திய அணியில் பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அஷ்வினை ரோல் மாடலாக கொண்டு அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் ஸ்பின்னர் இருக்கிறார் என்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணியினர் அவரை தங்களது பயிற்சி முகாமுக்கு அனுப்புமாறு பிசிசிஐக்கு கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற பிசிசிஐ பரோடாவில் இருந்து அந்த ஸ்பின்னரை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதை தொடர்ந்து அஸ்வின் போலவே பந்து வீசும் அந்த ஸ்பின்னரை ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் போன்ற முதன்மை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தீவிரமாக எதிர்கொண்டு பயிற்சி எடுத்து வருகிறார்கள். பரோடாவை சேர்ந்த அவர் இதுவரை 4 முதல் தரம் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். தமிழக வீரரான அஷ்வினை கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் முறையாக தொலைக்காட்சியில் பார்த்தது முதல் உத்வேகமடைந்து அவரைப் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா இந்திய முன்னாள் வீரர்கள் யூசுப் பதான், இர்பான் பதான் ஆகியோரிடம் பயிற்சி எடுத்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த நிலையில் அஷ்வினை தனது ரோல் மாடல் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அஷ்வினை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாகும். அது ஒருநாள் நிச்சயம் நடைபெறும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:பிட்னெஸ் இல்லனா உ.கோ அணியில் இடமில்லை – 2014இல் இந்திய வீரர்களை திட்டிய தோனி, பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்

முன்னதாக அஷ்வினை எதிர்கொள்வதற்கு தேவையான திட்டங்களை தயார் செய்துள்ளதாக மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த மாதமே தெரிவித்திருந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் அஸ்வின் போன்ற ஒரு பவுலரை நேரடியாக எதிர்கொண்டு வரும் அவர்கள் அவரையும் இந்தியாவையும் ஒரு கை பார்க்க வெறித்தனமாக பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement