IND vs AUS : டிக்கெட் வாங்க வந்த இந்திய ரசிகர்கள் மீது போலீஸ் தாக்குதல் – நடந்தது என்ன

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள இந்தியா மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா முதல் போட்டியில் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதால் வெற்றி பறிபோனது. அதனால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இத்தொடரின் கோப்பையை வென்று தலை நிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகத் தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட இந்தியா 2வது போட்டியில் கொதித்தெழுந்து பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் 2வது போட்டி செப்டம்பர் 23ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் தங்களை தலைகுனிய வைத்த ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக ஏற்கனவே அங்கு சென்றடைந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் பறக்க போகும் போட்டி நாக்பூரில் நடைபெறும் நிலையில் இத்தொடரின் கடைசி போட்டி வரும் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் கூட்டம்:
பொதுவாகவே இந்தியாவில் எந்த வகையான கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அதற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கமானது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மைதானங்கள் இருப்பதால் ஒரு மாநிலத்தில் இந்தியா பங்கேற்கும் சர்வதேச போட்டி ஒரு வருடத்திற்கு அல்லது 2 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வாடிக்கையாகும். அதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எப்போதுமே மவுசு அதிகமாக இருப்பதால் அதை நேரில் சென்று பார்ப்பதற்காக அந்தந்த நகரை சுற்றியுள்ள ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்குவது வழக்கமாகும்.

அந்த வகையில் ஹைதராபாத் நகரில் நடைபெறும் 3வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 22ஆம் தேதியன்றே துவங்கியது. அதை அறிந்த ரசிகர்கள் அதிகாலை 5 மணிக்கே டிக்கெட் விற்கப்படும் ஜிம்கானா மைதானத்திற்கு படையெடுத்துச் சென்று காத்திருந்தார்கள். அதை தொடர்ந்து காலை 9 மணியளவில் டிக்கெட் விற்பனை துவங்கிய போது எதிர்பார்த்ததை விட மும்மடங்கு கூட்டம் வந்ததால் டிக்கெட் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற எண்ணத்தில் அனைத்து ரசிகர்களும் முண்டியடித்துக் கொண்டு திரைப் படத்திற்கு டிக்கெட் வாங்குவது போல போட்டி போட்டனர்.

- Advertisement -

போலீஸ் தடியடி:
ஒரு கட்டத்தில் தடுப்புச்சுவர்களையும் கதவுகளையும் எகிறி குதித்த ரசிகர்கள் டிக்கெட் விற்கும் இடத்திற்கு ஒன்றாக உள்ளே நுழைந்ததால் அந்த இடம் பரபரப்பாக மாறியது. அதனால் ரசிகர்களை அமைதி காக்குமாறு மைதான நிர்வாகம் விடுத்த அறிவுறுத்தலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத ரசிகர்கள் கடுமையாக போட்டி போட்டு டிக்கெட்டுகளை வாங்கி முயற்சித்ததால் நிலைமை கை மீறிப் போனது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் நிலைமையை சமாளிக்க உள்ளூர் காவல் துறை அழைக்கப்பட்டது.

அவர்கள் வந்ததும் ரசிகர்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி கூட்டத்தை கலைப்பதற்கு போலீசார் தடியடி நடத்தினார்கள். அதனால் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் அடி வாங்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. மேலும் காவல்துறையினர் தாக்கியதில் 4 ரசிகர்கள் கடுமையான காயத்தை சந்தித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தங்களது நாடு தங்களது ஊரில் நீண்ட நாட்களுக்கு பின் விளையாடுவதை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எப்படியாவது டிக்கெட் வாங்கி பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடன வந்த ரசிகர்கள் மீது இறுதியில் தடியடி நடத்தப்பட்டது இதர ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

கூட்டம் வரும் என்பதை தெரிந்து அதை ஆரம்பத்திலேயே நிர்வகிக்க சரியான திட்டமிடலை செய்யாத ஹைதராபாத் மாநில வாரியத்தை அனைவரும் விமர்சிக்கிறார்கள். மேலும் ரசிகர்களான நாங்கள் இல்லாமல் கிரிக்கெட் உட்பட எதுவுமே கிடையாது என்று இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். எப்படி இருந்தாலும் டிக்கெட் வாங்க சென்ற ரசிகர்கள் மீது காவல் துறை எடுத்த இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement