பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு ஒரே ஓவரில் 4 விக்கெட்கள் – இந்தியாவுக்கு எச்சரிக்கையுடன் மாபெரும் உலக சாதனை படைத்த ஷாஹீன் அப்ரிடி

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2023 டி20 ப்ளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூன் 30ஆம் தேதியான நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வேர்விக்ஷைர் மற்றும் நாட்டிங்காம்ஷைர் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற வேர்விக்ஷைர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நாட்டிங்காம்ஷைர் 20 ஓவர்களில் போராடி 168 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிண்டன் ஜேம்ஸ் 37 (27) ரன்களும் டாம் மூர்ஸ் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 73 (42) ரன்களும் எடுத்து அசத்திய நிலையில் வேர்விக்ஷைர் அணி சார்பில் அதிகபட்சமாக லின்டோட் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 169 என்ற இலக்கை துரத்திய வேர்விக்ஷைர் அணிக்கு எதிராக முதல் ஓவரை பாகிஸ்தானை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்திலேயே ஒய்ட் வீசி 5 ரன்களை கொடுத்து சுமாராகவே ஓவரை துவங்கிய அவர் மீண்டும் வீசிய பந்தில் அலெக்ஸ் டேவிஸை எம்பிடபுள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அத்தோடு நிற்காமல் அடுத்து வந்த கிறிஸ் பெஞ்சமினை கீழே விழ வைக்கும் அளவுக்கு துல்லியமான யார்க்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கி கோல்டன் டக் அவுட்டாக்கிய அவர் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுப்பதை அடுத்து வந்த டான் மௌஸ்லி தடுத்தார்.

- Advertisement -

அப்ரிடியின் உலக சாதனை:
ஆனால் 2 பந்துகளுக்கு மேல் அவரை நிற்க விடாத ஷாஹீன் அப்ரிடி 5வது பந்தை ஸ்விங் செய்து கேட்ச் கொடுக்க வைத்து 1 (2) ரன்னில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அத்துடன் நிற்காமல் அடுத்து வந்த எட் பர்னடையும் கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டிய அவர் முதல் ஓவரிலேயே ஒய்ட் தவிர்த்து ரன்களை எதுவும் கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசி 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். அதன் வாயிலாக ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 4 விக்கெட்களை எடுத்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் ஷாஹீன் அப்ரிடி படைத்துள்ளார்.

2021 டி20 உலக கோப்பையில் இதே போலவே பந்து வீசி முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் உலக அளவில் மிகச் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இருப்பினும் கடந்த வருடம் காயமடைந்த அவர் முழுமையாக விளையாடாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் தற்போது குணமடைந்து விளையாடி வரும் அவர் இந்த அளவுக்கு அனல் பறக்கும் பந்து வீச்சை வெளிப்படுத்தியது பாகிஸ்தான் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் 2023 உலகக் கோப்பை நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அவர் முழுமையாக குணமடைந்து இப்படி அனலாக பந்து வீசியது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனால் 2021 போலவே 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோற்கடித்து வரலாற்று கணக்கை தீர்க்க அவர் உதவுவார் என்று அந்நாட்டு ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அவருடைய அதிரடிக்கு அசராத வேர்விக்ஷைர் அணிக்கு மற்றொரு தொடக்க வீரர் ராபர்ட் யாட்ஸ் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 65 (46) ரன்கள் எடுத்து சரிவை சரி செய்தார்.

இதையும் படிங்க:என் அம்மாவை பத்தியோ, என் அக்காவை பத்தியோ யார் பேசுனாலும் சும்மா இருக்க மாட்டேன் – கொதித்தெழுந்த ஜெய்ஸ்வால்

அதை பயன்படுத்தி லோயர் மிடில் ஆடரில் கிளன் மேக்ஸ்வெல் 27 (21) ஜேகப் பெத்தேல் 27 (21) ஜேக் லின்டோட் 27 (22) என முக்கிய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தனர். அதன் காரணமாக 19.1 ஓவரிலேயே 172/8 ரன்களை எடுத்த வேர்விக்ஷைர் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றதால் ஷாஹீன் அப்ரிடியின் போராட்டம் வீணாணது.

Advertisement