IND vs PAK : கோபமில்லையே, என்னுடன் பேசுவீங்களா – திறமையால் அசத்திய ஜடேஜாவிடம் தயவாக பேசிய முன்னாள் வீரர்

Jadeja-3
- Advertisement -

ஆசிய கோப்பை 2022 தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி எதிர்பார்த்ததைப் போலவே அனல் பறக்கும் திரில்லர் விருந்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தது. துபாயில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்மான் 43 (42) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 147 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்த ஜோடி சேர்ந்து 49 பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களிலும் முன்னாள் கேப்டன் விராட் கோலி 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த நிலைமையில் வந்த சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டானாலும் 5வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த ரவீந்திர ஜடேஜா 35 (29) ரன்களில் அவுட்டானார். அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா கடைசி வரை அவுட்டாகாமல் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (17) ரன்கள் விளாசி பினிசிங் கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய ஜடேஜா:
அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இதே மைதானத்தில் கடந்த வருடம் உலக கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து ஆசிய கோப்பையை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு 4வது இடத்தில் களமிறங்கி கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா முக்கிய பங்காற்றியது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட அவர் இந்தியாவுக்காக பந்துவீச்சில் பெரிய அளவில் விக்கெட்டுக்களை எடுக்கத் தடுமாறுவதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த சில முன்னாள் வீரர்களில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் முக்கியமானவராவார். ஆரம்ப காலங்களில் சுமாராக செயல்பட்ட ஜடேஜாவை ரொம்பவே மட்டம் தட்டி பேசி வந்த அவர் 2019 உலகக்கோப்பையின் போது “எப்போதாவது மட்டும் சிறப்பாக செயல்படக் கூடியவர்” என்ற கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தார். அதற்கு வாயால் பேசாமல் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்து பேட்டால் தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா அதன்பின் கடந்த சில வருடங்களாகவே 3 வகையான இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு நம்பர் ஒன் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

பவ்யமாய் மஞ்ரேக்கர்:
ஆனாலும் திருப்தியடையாத சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தொடர்ச்சியாக அவரை ஏதேனும் குறை சொல்லி விமர்சித்துக் கொண்டே வருகிறார். அதனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு ரவீந்திர ஜடேஜாவை பிடிக்காது என்பது இந்த உலகமே அறியும் செய்தியாகி விட்டது. இருப்பினும் விமர்சிக்க விமர்சிக்க சிறப்பாக செயல்படும் ஜடேஜாவின் வளர்ச்சியில் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு நிச்சயம் பங்குள்ளது என்றும் கூறலாம். அதனால் ஜடேஜா சிறப்பாக செயல்படும் போதெல்லாம் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்ப்பது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு நேற்றைய போட்டி முடிந்த பின் ஜடேஜாவை பேட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இத்தனை நாட்களாக விமர்சித்த தம்மிடம் ஜடேஜா பேசுவாரா என்று தயங்கிய அவர் “முதல் கேள்வி. நீங்கள் என்னுடன் பேசுவீர்கள் தானே? ஜட்டு, அதற்கு உங்களுக்கு சம்மதம் தானே” என்று பேட்டியை துவங்கினார்.

அதற்கு சிரித்துக்கொண்டே “ஆம் ஆம், கண்டிப்பாக பேசத் தயார்” என்று எதையுமே மனதில் வைக்காமல் குழந்தைபோல் ஜடேஜா பதிலளித்தார். அதைத் தொடர்ந்து தனது இன்னிங்ஸ் பற்றி ஜடேஜா பேசியது பின்வருமாறு. “உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி. நாங்கள் கடைசிவரை விளையாட முயற்சித்தோம். ஏனெனில் அவர்களிடம் நல்ல பவுலிங் உள்ளது. குறிப்பாக அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் எதையும் அவ்வளவு சுலபமாக கொடுக்கவில்லை”

“கடைசி ஓவரை இடது கை சுழல் பந்துவீச்சாளர் வீசிய போது இடது கை பேட்ஸ்மேனான நான் பினிஷிங் செய்திருக்க வேண்டும். இருப்பினும் பாண்டியாவும் சூப்பராக பேட்டிங் செய்தார். அவர் தன்னுடைய திட்டங்களை என்னிடம் தெரிவித்து கடைசிவரை விளையாடியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார். இதை பார்த்த ரசிகர்கள் வாயில் பேசாமல் செயல்பாடுகளால் பேசும்போது விமர்சகர்களும் உங்களைப் பாராட்டுவார்கள் என்பதற்கு ஜடேஜா உதாரணமாக விளங்குவதாக பாராட்டுகின்றனர்.

Advertisement