வீடியோ : தெறிக்கும் ஸ்பார்க், நாக் அவுட் பயத்தை அடித்து தூளாக்கிய ருதுராஜை பாராட்டிய டிகே – ஃபைனலில் 2 வரலாற்று சாதனை

Ruturaj gaikwad.jpeg
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2022 விஜய் ஹசாரே கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி டிசம்பர் 2ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய மகாராஷ்டிரா மற்றும் சௌராஷ்ட்ரா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு தொடக்க வீரர் பவன் ஷா 4 ரன்னில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய பச்சவ் உடன் கை கோர்த்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார்.

இந்த தொடரில் ஏற்கனவே அதிரடி சரவெடியாக செயல்பட்டு ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு உலக சாதனை படைத்து அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் அவர் இப்போட்டியிலும் நங்கூரமாக நின்று 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது அவருடன் விளையாடிய பச்சவ் 27 (59) ரன்களில் அவுட்டாகி சென்றார். அப்போது வந்த முக்கிய வீரர் அன்கீட் பாவ்னே 16 (22) அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட ருதுராஜ் கைக்வாட் தனி ஒருவனை போல் 7 பவுண்டரியும் 4 சிக்ஸரையும் பறக்க விட்டு சதமடித்து 108 (131) ரன்கள் குவித்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

- Advertisement -

நாக் அவுட் நாயகன்:
அதை பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசுய சௌராஷ்டிரா அடுத்து வந்த காஸி 37, ஷைக் 31*, நவாலே 13 என முக்கிய வீரர்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியதால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மகாராஷ்டிரா 248/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. முன்னதாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே அட்டகாசமாக செயல்பட்டு வரும் ருதுராஜ் உத்திர பிரதேசத்துக்கு எதிரான காலிறுறுதி போட்டியில் இரட்டை சதமடித்து 220* ரன்களும் அசாமுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதமடித்து 168 ரன்களும் விளாசி தனது அணியை ஃபைனலுக்கு அழைத்து வந்தார்.

அந்த நிலைமையில் ஃபைனலிலும் இதர வீரர்கள் தடுமாறிய போது கேப்டனாக முன்னின்று பொறுப்புடன் சதமடித்த அவர் அடுத்தடுத்த 3 நாக் அவுட் போட்டிகளிலும் சதமடித்து ஹாட்ரிக் சதங்களை விளாசியுள்ளார். குறிப்பாக இந்த ஃபைனலில் அடித்த சதம் மிகவும் முக்கியம் என்பதால் இதற்கு முந்தைய போட்டிகளை விட இப்போட்டியில் அதை மிகவும் ஆக்ரோஷமாக அவர் கொண்டாடினார். பொதுவாக உள்ளூர் தொடராக இருந்தாலும் கூட ஒரு நாக் போட்டியில் சதமடிப்பதே மிகவும் சவாலான ஒன்றாகும். ஆனால் இவரோ 3 அடுத்தடுத்த நாக் அவுட் போட்டிகளில் அதுவும் கேப்டனாக இரு மடங்கு அழுத்தத்தை உள்வாங்கி அபாரமாக செயல்பட்டு ஹாட்ரிக் சதங்களை அடித்துள்ளது உண்மையாகவே பாராட்டுக்குரியதாகும்.

- Advertisement -

அதிலும் இந்த மாபெரும் ஃபைனலில் முதல் 61 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் அதன் பின் 108 ரன்களை விளாசியது உண்மையாகவே அவருடைய பேட்டிங் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அத்துடன் 136, 154*, 124, 21, 168, 124*, 40, 220*, 168, 108 என கடைசி 10 விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் 8 சதங்கள் உட்பட 1263 ரன்களை 180.42 என்ற வெறித்தனமான சராசரியில் குவித்து வரும் அவர் பேட்டிங்கில் ஸ்பார்க்கை தெறிக்க விடுகிறார் என்றே கூறலாம்.

அப்படி நாக் அவுட் போட்டியில் அடுத்தடுத்த சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரே சீசனில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆகிய 3 நாக் அவுட் போட்டிகளிலும் தொடர்ந்து சதமடித்த முதல் வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அதை விட விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ருதுராஜ் கைக்வாட் : 12*
2. ராபின் உத்தப்பா : 11
3. அன்கிட் பாவ்னே : 11

இப்படி மிரட்டலாக செயல்படும் இவருக்கு இந்திய ஒருநாள் அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தோனிக்கு பின் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக வருவாரா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement