IND vs PAK : சொதப்பிய இளம் வீரரை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா, வைரல் வீடியோ இதோ

Rohit Sharma Angry
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் பரம எதிரியான இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று லீக் சுற்றில் சந்தித்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 181/7 ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்கள் 30 ரன்களை தாண்டாமல் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக கடைசி ஓவர் வரை போராடிய விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

அதை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 14, பக்கார் ஜமான் 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் 3-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த முகம்மது நவாஸ் அதிரடியாக 42 (20) ரன்களும் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 71 (51) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தார்கள். இறுதியில் ஆசிப் அலி 16 (8) ரன்களும் குஷ்தில் ஷா 14* (11) ரன்களும் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் வென்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

- Advertisement -

அழுத்தத்தில் இந்தியா:
மறுபுறம் டாஸ் இழந்த பின்பும் பேட்டிங்கில் முடிந்தளவுக்கு போராடிய இந்தியா 200 ரன்களை தொடாமல் போனது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதே போல் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க தவறிய இந்தியா கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்கியதும் ஆசிப் அலி 0 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை அர்ஷிதீப் சிங் கோட்டை விட்டதும் தோல்வியை பரிசளித்தது. இதனால் சூப்பர் 4 சுற்றில் எஞ்சியுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு நடப்பு சாம்பியன் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

சொதப்பிய பண்ட்:
முன்னதாக இந்த போட்டியில் 181 ரன்கள் எடுத்த இந்தியா 200 ரன்களை தொடாமல் 15 – 20 ரன்கள் குறைவாக எடுத்தது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. ஒருவேளை அந்த ரன்களை 16 – 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு எடுக்கும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்படும் தினேஷ் கார்த்திக் இப்போட்டியில் நீக்கப்படாமல் இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

அதனாலேயே நேற்றைய போட்டி துவங்கிய போதே நிறைய ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுவார் என்று ரோகித் சர்மா நம்பி வாய்ப்பு கொடுத்தார். ஆனால் சடாப் கான் வீசிய 14வது ஓவரில் தேவையின்றி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்த அவர் வழக்கம்போல குருட்டுத்தனமான ஷாட்டை அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடுப்பான ரோஹித்:
அதனால் கோபமடைந்த ரோகித் சர்மா பெவிலியனுக்கு வந்த ரிஷப் பண்ட்டை கடுமையாக திட்டி எதற்காக அந்த ஷாட்டை அடித்தீர்கள் என்ற வகையில் கேள்வி எழுப்பினார். அதற்கு ரிஷப் பண்ட் பதிலளித்த போதிலும் அதை ஏற்றுக்கொள்ளாத ரோகித் சர்மா பெவிலியனில் கடுமையான கோபத்துடன் இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி சக்கை போடு போடும் ரிஷப் பண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற ஜாம்பவான் பவுலர்களை அசால்டாக ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதற்காக உள் வட்டத்திற்கு வெளியே நிறைய பீல்டர்கள் நிற்கும் டி20 கிரிக்கெட்டிலும் கண்மூடித்தனமாக அதையே செய்வது அவருடைய முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார் என்ற காரணத்தால் விமர்சனங்களையும் தாண்டி இதுவரை 56 என்ற அதிகப்படியான டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் அதில் ஒரு முறை கூட ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதே கிடையாது.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணி என்ன செய்யவேண்டும்? – சேன்ஸ் இருக்கா?

எனவே அடுத்து வரும் போட்டிகளில் அவரை அதிரடியாக நீக்கி சஞ்சு சாம்சன் போன்ற வாய்ப்புக்காக ஏங்கும் வீரர்களை போல் வாய்ப்பின் அருமையை உணர்த்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement