வீடியோ : அதிரடியாக விளையாடியும் கேப்டனாக சுயநலமின்றி அவுட்டான ரோஹித் சர்மா – காரணத்தை அறிந்து பாராட்டும் ரசிகர்கள்

Rohit Sharma Run Out
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறும் முனைப்படும் விளையாடி வருகிறது. நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அதனால் 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

முன்னதாக கடந்த வருடம் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா பணிச்சுமை மற்றும் காயம் காரணமாக ஓய்வெடுத்த நிலையில் முதல் முறையாக இந்த தொடரில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தி வருகிறார். அதில் நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இதர வீரர்கள் தடுமாறிய போது மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்த அவர் 120 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

சுயநலமற்ற கேப்டன்:
குறிப்பாக சுழலுக்கு சாதகமான மைதானத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டிய ரோகித் சர்மா மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று இயன் சேப்பல், மார்க் வாக் போன்ற ஆஸ்திரேலிய வீரர்களின் பாராட்டுகளையும் அள்ளினார். அந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் 32 ரன்கள் எடுத்த அவர் 2வது இன்னிங்ஸில் 115 ரன்களை துரத்தும் போது 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு அதிரடியாக 31 (20) ரன்கள் குவித்து எதிரணியை சிதற விட்டார். அதே வேகத்தில் மாட் குனேமான் வீசிய 7வது ஓவரின் 5வது பந்தில் ஸ்கொயர் லெக் பகுதியில் அதிரடியாக அடித்த அவர் வேகமாக 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார்.

அதில் முதல் ரன்னை வெற்றிகரமாக எடுத்த அவர் 2வது ரன்னை எடுக்க எதிர்ப்புறமிருந்த புஜாராவுக்கு அழைப்பு விடுத்த போது பீல்டர் பந்தை எடுத்ததை கவனித்து நடு பிட்ச்சில் ஓட்டத்தை நிறுத்தினார். ஆனால் அதற்குள் ரோகித் சர்மாவின் அழைப்பை ஏற்று பந்தை பார்த்துக்கொண்டே புஜாராவும் பாதி தூரம் ஓடி வந்து விட்டார். அதனால் தன் மீது தவறு இருப்பதை உணர்ந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை காப்பாற்றுவதற்காக க்ரீஸ் நோக்கி ஓடாமல் அப்படியே நின்று புஜாராவின் விக்கெட்டை காப்பாற்றி ஏமாற்றத்துடன் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இபோட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடும் 12வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்த புஜாரா ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான நிலையில் குறைந்தபட்சம் 2வது இன்னிங்ஸிலாவது நல்ல ரன்களை எடுக்கட்டும் என்ற எண்ணத்துடன் கேப்டனுக்கு அடையாளமாக அந்த தருணத்தில் ரோகித் சர்மா அவுட்டாகி சென்றது தெளிவாக தெரிந்தது. அதை கவனித்த ரசிகர்கள் ரோகித் சர்மா அந்த சமயத்தில் மிகவும் சுயநலமின்றி அணியின் நலனுக்காகவும் அணி வீரரின் நலனுக்காகவும் அவுட்டாகி சென்றதாக சமூக வலைதளங்களில் மனதார பாராட்டுகிறார்கள்.

இறுதியில் கேப்டனின் தியாகத்தை வீணடிக்காத புஜாரா கடைசி வரை அவுட்டாகாமல் பேட்டிங் செய்து 31* ரன்கள் அடித்து பவுண்டரியுடன் பினிஷிங் கொடுத்து தனது 100வது போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் தனது 100வது போட்டியில் வெற்றி பெறும் ரன்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையும் புஜாரா பெற்றார்.

இதையும் படிங்க: IND vs AUS : 3வது போட்டியில் ராகுல் நீக்கப்படுவாரா? கேப்டன் ரோஹித் – கோச் டிராவிட் கொடுத்த நேரடி பதில் இதோ

அதற்கு தனது விக்கெட்டை தியாகம் கொடுத்து முக்கிய காரணமாக இருந்த ரோகித் சர்மா மிகச் சிறந்த கேப்டனுக்கு அடையாளமாக செயல்பட்டது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement