IND vs AUS : 3வது போட்டியில் ராகுல் நீக்கப்படுவாரா? கேப்டன் ரோஹித் – கோச் டிராவிட் கொடுத்த நேரடி பதில் இதோ

KL Rahul Dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ள இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. முன்னதாக சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு 2022 ஐபிஎல் தொடருக்குப் பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் பார்மை இழந்து மோசமாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் இத்தொடரில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

KL-Rahul

- Advertisement -

ஏனெனில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோபையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாகும் வகையில் செயல்பட்டார். மேலும் கடந்த டிசம்பரில் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்பட்ட அவருக்கு பதிலாக அதே தொடரில் முதல் முறையாக சதமடித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

ரோஹித், ட்ராவிட் பதில்:
இருப்பினும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக மீண்டும் வாய்ப்பு பெற்ற அவர் 20, 17, 1 என இந்த ஆஸ்திரேலிய தொடரில் சுமாராகவே செயல்பட்டுள்ளார். அதனால் மேலும் கடுப்பாகியுள்ள வெங்கடேஷ் பிரசாத் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அடுத்த போட்டியில் அவரை நீக்கி விட்டு சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கொதித்து வருகிறார்கள். இருப்பினும் அனைவருக்கும் மோசமான தருணங்கள் வருவது சகஜம் என்பதால் தொடர்ந்து ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது பற்றி 2வது போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

Rahul-Dravid

“அவர் தனது செயல்பாடுகளை நம்ப வேண்டும் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு மண்ணில் மிகச்சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ள அவருக்கு இது ஒரு மோசமான தருணமாகும். இருப்பினும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்துள்ள அவருக்கு நாங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க உள்ளோம். ஏனெனில் இந்த மோசமான தருணத்திலிருந்து மீண்டெழுந்து சிறப்பாக செயல்படும் க்ளாஸ் அவரிடம் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். அதே சமயம் அவரை முன்னேற்றுவதற்கு டெக்னிக்கல் அளவில் எந்த பயிற்சியும் தேவையில்லை. மாறாக மனதளவில் உறுதியாக இருக்க தேவையான ஆதரவும் வாய்ப்பும் கொடுத்தாலே அவர் இதிலிருந்து மீண்டு வந்து விடுவார்” என்று கூறினார்.

- Advertisement -

இது பற்றி கேப்டன் ரோகித் சர்மா போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இது போன்ற மைதானங்களில் நீங்கள் வெவ்வேறு வகைகளில் ரன்களை அடிக்க முயற்சிக்க வேண்டும். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வித்தியாசமான முறையில் ரன்களை அடிக்க வேண்டும். இருப்பினும் நாங்கள் தனிநபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பற்றி பார்க்கவில்லை. மாறாக அனைத்து வீரர்களும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பார்க்கிறோம். தற்சமயத்தில் ராகுலை பற்றி நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன”

Rohit-Sharma

“ஆனால் நாங்கள் எப்போதும் ராகுல் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனி நபர் வீரர்களின் திறமைகளை மட்டுமே பார்க்கிறோம். எனவே ஒரு வீரரிடம் நல்ல திறமை இருந்தால் நிச்சயமாக அவருக்கு நீண்ட வாய்ப்பு கொடுப்போம். இது ராகுலுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். மேலும் அவர் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்துள்ளதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். குறிப்பாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் தோற்ற பின்பும் கடினமான சூழ்நிலைகளில் அவர் சதமடித்தார். அந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்றது” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான – இந்திய அணி அறிவிப்பு

அதாவது சுமாராக செயல்பட்டும் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா வென்ற காரணத்தாலும் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலும் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கூறியுள்ளது ரசிகர்களை மீண்டும் கொந்தளிக்க வைக்கிறது.

Advertisement