வீடியோ : உங்களுக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும். ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தது குறித்து – கலாய்க்கும் ரசிகர்கள்

Rishabh Pant Catch
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் தெறிக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பரபரப்பாக நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக நவம்பர் 6ஆம் தேதியன்று நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் முன்னதாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா தன்னுடைய சம்பிரதாய கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 186/5 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61* (25) ரன்களும் கேஎல் ராகுல் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51 (35) ரன்கள் எடுத்தனர். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே முதல் பந்திலிருந்தே அனலாக பந்து வீசிய இந்திய பவுலர்களிடம் சரணடைந்து 17.2 ஓவரில் வெறும் 115 ரன்கள் ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரியான் பர்ல் 35 (22) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சொதப்பிய பண்ட்:
அதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா நவம்பர் 10ஆம் தேதியன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. முன்னதாக இந்த தொடரில் விக்கெட் கீப்பராக ஐபிஎல் 2022 தொடரில் கடினமாக உழைத்து 37 வயதில் அபார கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்க்கு கேப்டன் ரோஹித் சர்மா நம்பி வாய்ப்பளித்தார். ஆனால் அந்த வாய்ப்பில் முதல் 4 போட்டிகளில் பேட்டிங்கில் பினிஷிங் செய்யத் தவறிய அவர் விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பியதால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு காபா போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்குமாறு எழுந்த கோரிக்கைகளை ஏற்ற ரோஹித் சர்மா இப்போட்டியில் தினேஷ் கார்த்திக்கு பதிலாக வாய்ப்பு கொடுத்தார். அதில் 95/2 என்ற நல்ல தொடக்கத்தை கொடுத்த பின் கேஎல் ராகுல் அவுட்டான போது களமிறங்கிய ரிஷப் பண்ட் வழக்கம் போல 5 பந்துகளை எதிர்கொண்டும் அதிரடி காட்ட முடியாததால் ஏற்பட்ட அழுத்தத்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார்.

- Advertisement -

ஆனால் அதை சரியாக அடிக்க தவறியதால் கேட்ச்சாக மாறிய அந்த பந்தை பவுண்டரி எல்லை அருகே ஓடி வந்த ஜிம்பாப்வே வீரர் ரியல் பார்ல் தாவி பிடித்த அனைவரது பாராட்டுகளையும் பெற்று ரிஷப் பண்ட்டை 3 ரன்களில் காலி செய்தார். அதனால் “இவ்வளவு நாட்கள் கழித்து கிடைத்த வாய்ப்பில் என்னை சொதப்ப வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்தீங்களா” என்ற வகையில் ரிசப் பண்ட் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

முன்னதாக அறிமுகமான 2017 முதல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் அவர் டி20 கிரிக்கெட்டில் இது வரை பெற்ற 59 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளில் இதே போலவே ஒருமுறை கூட ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டதில்லை. அதன் காரணமாகவே ஒதுக்கப்பட்ட அவர் தினேஷ் கார்த்திக் சொதப்பியதால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். ஆனால் அந்த வாய்ப்பையும் தற்போது பொன்னாக மாற்ற தவறிய அவரை மீண்டும் கலாய்க்கும் ரசிகர்கள் மீண்டும் டிகே’வுக்கு வாய்ப்பளிக்குமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : IND vs ZIM : ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கியது ஏன். டாஸின் போதே விளக்கம் கொடுத்த – ரோஹித் கூறியது என்ன?

இருப்பினும் இந்த ஒரு போட்டிக்காக அதிரடியாக நீக்கப்பட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்ததாக நாக் அவுட் சுற்று நடைபெறுவதால் அதிலாவது இப்படி சொதப்பாமல் தயவு செய்து 20, 30 போன்ற ரன்களையாவது எடுக்குமாறு அவருக்கு ரசிகர்கள் கோரிக்கை வைப்பதையும் பார்க்க முடிகிறது.

Advertisement