வீடியோ : ஆஸ்கார் போல ஒன்றாக விருது வென்று நாட்டு நாட்டு நடனமாடிய அஷ்வின் – ஜடேஜா ஜோடி

Ashwin Jadeja Nattu
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா 2017, 2018/19, 2020/21, 2023* என அடுத்தடுத்து 4 தொடர்களில் கிரிக்கெட்டின் அசுரனாக திகழும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. மேலும் 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் தோற்காமல் வெற்றி நடை போடும் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியாவை 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

அந்த நிலையில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் பிளாட்டான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுக்க அடுத்ததாக பேட்டிங் செய்த இந்தியா 571 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தாலும் அதற்குள் 4 நாட்கள் முடிந்து விட்டது. அதனால் அந்த போட்டி டிராவில் முடிந்தாலும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற காரணத்தால் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றது.

- Advertisement -

நாட்டு நாட்டு:
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்ற நிலையில் தொடர் நாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஜோடியாக தட்டிச் சென்றார்கள். குறிப்பாக இத்தொடரில் ஜடேஜா 135 ரன்களும் 22 விக்கெட்டுகளும் அஷ்வின் 86 ரன்களும் 25 விக்கெட்களும் எடுத்து ஆல் ரவுண்டர்களாக அசத்தியதால் இந்த விருதை ஒன்றாக வென்றுள்ளார்கள்.

கடந்த 10 வருடங்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா எதிரணிகளிடம் தோற்காமல் வெற்றி நடை போடுவதற்கு சுழல் பந்து வீச்சு துறையில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வரும் இவர்களை சமாளிக்க முடியாமல் தோல்வியை சந்தித்த பல அணிகளில் தற்போது நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவும் வீழ்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த விருதை ஒன்றாக வென்றதற்காக இருவருக்கும் ரூபாய் 2,50,000 லட்சம் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதை எப்படி பிரித்துக் கொள்வது என்பதை போட்டி முடிந்த பின் உடை மாற்றும் அறையில் இருவரும் சேர்ந்து பிரபல பாலிவுட் திரைப்படத்தின் வசனத்தை மையப்படுத்தி நகைச்சுவையாக வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். அதில் “ஒன்று எனக்கு இரண்டு உனக்கு மூன்று எனக்கு” என பளு தூக்கும் இரும்பு உருண்டைகளை அஷ்வினுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுக்கும் ஜடேஜா “50 – 50, கணக்கு சரியாக இருக்கிறதா, குழப்பம் இல்லையே, மகிழ்ச்சியா” என்று கேட்கிறார்.

அதற்கு குழந்தையைப் போல் மிகவும் மகிழ்ச்சியாக அஷ்வின் தலையசைத்து ரியாக்சன் கொடுக்கிறார். இறுதியில் இருவரும் பிரபல ஆர்ஆர்ஆர் தெலுங்கு திரைப்படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு அண்ணன் தம்பிகளை போல் தோள் மீது கை போட்டு பரிசு தொகையுடன் நடனமாடுவது போல் அந்த வீடியோ முடிவடைகிறது. இப்போட்டியில் இந்தியா வென்ற இதே நாளில் 2023 ஆஸ்கர் விருதில் இந்த நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான விருதை வென்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்தது.

இதையும் படிங்க:வீடியோ : இதே நானா இருந்தா அவுட் கொடுத்துருப்பிங்க தானே? சர்ச்சை அம்பயரை சமயம் பார்த்து நேராக கலாய்த்த கிங் கோலி

அதை இந்தியாவின் வெற்றியுடன் இணைத்துக் கொண்டாடும் வகையில் இந்திய அணியில் சுழல் பந்து வீச்சு துறையில் அண்ணன் தம்பிகள் போல ஒன்று சேர்ந்து எதிரணிகளை தெறிக்க விட்டு வரும் அஷ்வின் – ஜடேஜா ஆகியோர் இவ்வாறு வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement