வீடியோ : இவரை பாத்து கத்துக்கோங்க டிகே, அபார பினிஷிங் கொடுத்த அஷ்வின், வியந்த கோலி – கொண்டாடும் ரசிகர்கள்

Virat Kohli Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் இந்தியா தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்ததால் செமி ஃபைனலுக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக நிலைமைக்கு தள்ளப்பட்டது. அந்த நிலைமையில் நவம்பர் 2ஆம் தேதியன்று புகழ்பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்தை தன்னுடைய 4வது போட்டியில் எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 184/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிரடியாக 3 பவுண்டரி 4 சிக்சருடன் 50 (32) ரன்களும் விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 64* (44) ரன்களும் குவித்தனர்.

அதைத் தொடர்ந்து 185 ரன்களை துரத்திய அந்த அணிக்கு ஒருபுறம் சான்டோ நங்கூரமாக நிற்க மறுபுறம் பவர் பிளே ஓவர்களில் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரை சதமடித்தார். அதனால் 7 ஓவர்களில் வங்கதேசம் 66/0 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்ததால் டிஎல்எஸ் விதிமுறைப்படி அந்த அணி 17 ரன்களை கூடுதலாக எடுத்திருந்தது. அதனால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது மழை நின்றதால் வங்கதேசம் 16 ஓவரில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது.

- Advertisement -

கத்துக்கோங்க டிகே:
அப்போது 7 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (27) ரன்கள் எடுத்த மிரட்டிய லிட்டன் தாஸ் கேஎல் ராகுலின் அபாரமான செயல்பாட்டால் ரன் அவுட்டாகி சென்றது போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஏனெனில் அதை பயன்படுத்திய இந்தியா அடுத்து வந்த கேப்டன் சாகிப் அல் ஹசன் 13 (12) அபிப் ஹொசைன் 3 (5) யாசிர் அலி 1 (3) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் காலி செய்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் நூருல் ஹொசைன் 25* (14) ரன்கள் எடுத்து மிரட்டியதால் வங்கதேசத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 14 ரன்கள் மட்டுமே கொடுத்த அரஷ்தீப் சிங் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை திரில் வெற்றி பெற வைத்தார்.

அதனால் குரூப் 2 புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளை பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு மிடில் ஆடரில் ஹர்திக் பாண்டியா 5 (6) தினேஷ் கார்த்திக் 7 (5) அக்சர் பட்டேல் 7 (6) என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக ஒருபுறம் விராட் கோலி நங்கூரமாக நிற்க எதிர்ப்புறம் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் 17வது ஓவரின் கடைசி பந்தில் தேவையின்றி ரன் அவுட்டாகி மீண்டும் ஒருமுறை அழுத்தமான போட்டியில் சொதப்பினார்.

- Advertisement -

அப்போது களமிறங்கிய அக்சர் பட்டேலும் நடைய கட்டிய நிலையில் அடுத்ததாக களமிறங்கிய அஷ்வின் ஆரம்பத்தில் சிங்கிள் எடுத்து விராட் கோலிக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து கச்சிதமாக செயல்பட்டார். ஆனால் கடைசி ஓவரில் முதல் பந்தை எதிர்கொண்டு ரன் எடுக்காத அவரை அடுத்த பந்தில் எப்படியாவது ஸ்ட்ரைக்கை மாற்றுமாறு வர்ணையாளர்கள் அறிவுறுத்தினர். ஆனால் ஷோரிபுல் இஸ்லாம் வீசிய 2வது பந்தில் டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் 79 மீட்டர் பிரம்மாண்ட சிக்சரை பறக்க விட்ட அஷ்வின் அடுத்த பந்தில் மிட் ஆஃப் திசையில் அற்புதமான பவுண்டரியை தெறிக்க விட்டார்.

அதை எதிர்புறமிருந்து விராட் கோலி பாராட்டிய நிலையில் மொத்தமாக 6 பந்துகளில் 13* ரன்களை 216.67 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் இறுதியில் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பதிவு செய்த வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் கடைசி பந்தில் 100 ரன்களுக்கு நிகரான 1 ரன் எடுத்து வரலாற்று வெற்றியை பினிஷிங் செய்த அவரை பார்த்து அழுத்தமான நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தினேஷ் கார்த்திக் கற்றுக் கொள்ள வேண்டுமென தமிழக ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

மேலும் இப்படி சிறுசிறு விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றும் அஷ்வினை ஹர்பஜன் சிங், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் தேவையின்றி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement