டி20 உ.கோ’யில் மன்கட் ரன் அவுட் செய்வீர்களா – செய்தியாளர் கேள்விக்கு அனைத்து கேப்டன்கள் அளித்த பதில் என்ன

T20 World Cup Captains 2022
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா, உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, அடிலெய்ட் போன்ற பிரபல நகரங்களில் நடைபெறும் இத்தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் பைனல் உட்பட 45 போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் அக்டோபர் 16இல் துவங்கும் தகுதி சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, அயர்லாந்து போன்ற 8 அணிகள் மோதுகின்றன.

அதன் முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டும் அக்டோபர் 22ஆம் தேதி துவங்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். அதை தொடர்ந்து நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கிய போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இறுதியில் சூப்பர் 12 சுற்றின் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன.

- Advertisement -

மன்கட் கேள்வி:
அதை தொடர்ந்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் வெல்லும் 2 அணிகள் நவம்பர் 13ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்படி கிட்டத்தட்ட ஒரு மாதம் திருவிழாவாக நடைபெறும் இத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து 16 அணிகளும் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அதில் பங்கேற்கும் அனைத்து 16 அணிகளைச் சேர்ந்த கேப்டன்கள் பங்கேற்ற மெகா செய்தியாளர்கள் சந்திப்பு மெல்போர்ன் நகரில் அக்டோபர் 14ஆம் தேதியன்று மாலை நடைபெற்றது.

அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்தந்த கேப்டன்கள் பதிலளித்த நிலையில் தற்சமயத்தில் உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக நிலவும் மன்கட் ரன் அவுட் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. முன்னதாக 2019 ஐபிஎல் தொடரில் பட்லரை மன்கட் செய்த தமிழகத்தின் அஷ்வின் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதில் நியாயமிருந்ததால் ஏற்றுக் கொண்ட எம்சிசி அமைப்பு அதை ரன்-அவுட் பிரிவுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியது. ஆனாலும் கடந்த மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அவ்வாறு ரன் அவுட் செய்தது நேர்மைக்குப் புறம்பான செயல் என்று அந்நாட்டவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

அதற்கு தாங்கள் அங்கீகரித்த விதிமுறையை விமர்சிப்பதில் எவ்வித பயனுமில்லை என்று லண்டனின் எம்சிசி நிர்வாகம் பதிலடி கொடுத்தது. மேலும் இந்த டி20 உலக கோப்பையில் மன்கட் ரன் அவுட் விதிமுறை உறுதியாக கடைபிடிக்கப்படும் என்றும் அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும் நேற்று முன்தினம் கடுமையாக எச்சரித்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த நிலையில் இத்தொடரில் மன்கட் ரன் அவுட் விதிமுறையை கடைபிடித்து தேவைப்பட்டால் செய்வீர்களா என்ற கேள்வியை 16 கேப்டன்களையும் இரு பிரிவுகளாக பிரித்து 8 கேப்டன்களிடம் எழுப்பிய செய்தியாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்துமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, இலங்கை, நமீபியா, அமீரகம் ஆகிய 8 கேப்டன்கள் அடங்கிய முதல் குழு அதற்கு பதிலளிக்காமல் கையையும் உயர்த்தாமல் அப்படி ஒரு கேள்வியே காதில் விழாத வகையில் அமைதியாகவே அமர்ந்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதனால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் மீண்டும் அந்த கேள்வியை கேப்டன்களிடம் கேட்ட போதும் எந்த பதிலும் வரவில்லை.

அதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற எஞ்சிய 8 கேப்டன்களைக் கொண்ட 2வது குழுவிடம் அந்தக் கேள்வி மொத்தமாக தவிர்க்கப்பட்டது. மொத்தத்தில் முழுமையாக அங்கீகரிக்கப்படும் மன்கட் ரன் அவுட் செய்வதற்கு பெரும்பாலான கேப்டன்கள் ஆதரவாக இல்லை என்பதை உணர்த்தும் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement