இது தான் ஒரிஜினல் ஃபார்ம் – கொஞ்சமும் மாறாத பாரம்பரிய பரிதாப சொதப்பலை அரங்கேற்றிய பாகிஸ்தான் வீரர்கள்

Drop Catch
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கடந்த போட்டியை போல பெரிய அச்சுறுத்தலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாஹீன் அப்ரிடியை இம்முறை தடுமாறாமல் முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த துவக்கத்தை கொடுத்தார்.

அந்த தன்னம்பிக்கையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் வேகமாக ரன்களை சேர்த்தார். அந்த வகையில் பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டலை கொடுக்கக்கூடிய பாகிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி 17 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தது.

- Advertisement -

பாகிஸ்தானின் சொதப்பல்:
அதில் ரோஹித் சர்மா 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 (49) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவவர்களில் மறுபுறம் 10 பவுண்டரியுடன் அசத்திய சுப்மன் கில் 58 (52) ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டதால் 24.1 ஓவரில் இந்தியா 147/2 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் வந்து போட்டியை நிறுத்தியது.

முன்னதாக இந்த போட்டியில் 0 ரன்களில் சுப்மன் கில் இருந்த போது கொடுத்த கேட்சை ஷாஹீன் அப்ரிடி தவற விட்டு சொதப்பலை அரங்கேற்றினார். அதை பயன்படுத்திய கில் நேரடியான ஆட்டத்தை துவங்கி 30 ரன்களில் இருந்த போது மீண்டும் நாசீம் ஷா வீசிய 8வது ஓவரில் பவுண்டரி அடிக்க முயற்சித்து எட்ஜ் கொடுத்தார். இருப்பினும் சரியாக அடிக்க தவறியதால் நேராக ஸ்லிப் ஃபீல்டர்களை நோக்கி பந்து பறந்தது.

- Advertisement -

ஆனால் அப்போது அதை முதல் ஸ்லிப் பகுதியில் பிடிக்க வேண்டிய இப்திகார் அகமது 2வது ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த சல்மான் ஆஹா பிடிப்பார் என்று கையை முன்னோக்கி எடுத்து சென்று வேடிக்கை மட்டுமே பார்த்தார். மறுபுறம் அதை அவர் பிடிப்பார் என்று கையை முன்னோக்கி எடுத்துச் செல்லாமலேயே சல்மான் ஆஹா வேடிக்கை பார்ப்பதற்குள் இருவருக்கும் மத்தியில் நுழைந்த பந்து வேகமாக பவுண்டரி சென்றது.

கடைசியில் இருவருமே கேட்ச் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த இடத்தில் கொஞ்சமும் முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்தது சிரிப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது. வரலாற்றில் சயீத் அஜ்மல் – சோயப் மாலிக் உட்பட “இவர் பிடிப்பார் என்று அவரும் அவர் பிடிப்பார் என்று இவரும்” என பாகிஸ்தான் வீரர்கள் பலமுறை இது போன்ற எளிதான கேட்ச்களை விட்டுள்ளனர். அந்த வரிசையில் இப்போட்டியிலும் பரிதாபமான கேட்ச்சை பாகிஸ்தான் வீரர்கள் கோட்டை விட்டதை பார்க்கும் ரசிகர்கள் எது மாறினாலும் இது மாறாது என்றும் இப்போது தான் முழுமையான ஃபார்முக்கு வந்துள்ளார்கள் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement