வீடியோ : சேப்பாக்கம் மைதான பராமரிப்பாளர்களுக்கு ஆட்டோகிராப் மற்றும் பரிசுதொகை வழங்கிய தல தோனி

Chepauk Curators
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் 5வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றில் சில தோல்விகளை சந்தித்தாலும் 17 புள்ளிகளைப் பெற்று 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக வரலாற்றில் பங்கேற்ற 14 சீசனங்களில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்திய அந்த அணி குவாலிபயர் 1 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை தோற்கடித்து வரலாற்றில் 10வது முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது.

முன்னதாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறக்கூடிய ஐபிஎல் தொடர் கடந்த 2020, 2021, 2022 ஆகிய சீசன்களில் லாக் டவுன் காரணமாக துபாய் மற்றும் மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெற்றது. இருப்பினும் தற்போது நிலைமை சீராகியுள்ளதால் 2019க்குப்பின் அந்தந்த அணிகள் தங்களது சொந்த மைதானங்களில் விளையாடும் வாய்ப்பை பெற்றதை போல சென்னையும் தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 4 வருடங்கள் கழித்து விளையாடியது. குறிப்பாக அந்த மைதானத்தில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த 3 ஸ்டேண்டுகள் தற்போது புதிதாக கட்டமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பராமரிப்பாளர்களுக்கு பரிசு:
அதனால் மொத்த மைதானத்தையும் நிரப்பும் அளவுக்கு இந்த சீசனில் சென்னை விளையாடிய போட்டிகளில் தமிழக ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆதரவு கொடுத்தனர். குறிப்பாக தோனி களமிறங்கிய போது மைதானத்தின் டிஜே ஸ்பெஷல் பாடல்களை ஒளிபரப்பியதும் அவர் சிக்ஸர் அடித்த போது ரசிகர்கள் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு ஆரவாரம் செய்ததும் மறக்க முடியாததாக அமைந்தது. அப்படி இந்த சீசன் முழுவதும் தங்களுக்கு ஆதரவு கொடுத்த சென்னை ரசிகர்களுக்கு கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியின் முடிவில் தோனி தலைமையிலான சென்னையை அணியினர் கையொப்பமிட்ட ஜெர்சி, பந்துகள் போன்ற உபகரணங்களை பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வருடம் 7 லீக் சுற்று மற்றும் 2 பிளே ஆஃப் சுற்று என மொத்தம் 9 போட்டிகளை சேப்பாக்கத்தில் வெற்றிகரமாகவும் தரமாகவும் நடத்துவதற்கு உதவிய எம்ஏ சிதம்பரம் மைதான பராமரிப்பாளர்களை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தது. அப்போது சேப்பாக்கம் மைதானத்தை முழுவதுமாக பராமரிக்கும் அனைத்து பராமரிப்பாளர்களும் தோனியை அருகில் பார்த்த மகிழ்ச்சியில் சிரித்த முகத்துடன் சென்று ஆட்டோகிராப் வாங்கினர்.

- Advertisement -

அவர்களுக்கு சிரித்த முகத்துடன் ஆட்டோகிராப் வழங்கிய தோனி சென்னை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதனுடன் இணைந்து இந்த சீசனில் சிறந்த போட்டிகளை நடத்த உதவியதை பாராட்டும் வகையில் ஊக்கத் தொகையை பரிசளித்தார். இறுதியில் தோனி, காசி விஸ்வநாதன் ஆகியோருடன் சேப்பாக்கம் மைதான பராமரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இந்தப் பாராட்டுக்கும் பரிசுக்கும் அவர்கள் மிகவும் தகுதியானவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த சீசனில் கொல்கத்தா, மும்பை போன்ற மைதானங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது.

Chepauk

மறுபுறம் லக்னோ, டெல்லி போன்ற மைதானங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் சேப்பாக்கத்தில் தான் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 170, 180, 200 போன்ற ஸ்கோர்களை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக அடிக்கும் அளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருந்த அதே சேப்பாக்கம் பிட்ச்சில் ஜடேஜா போன்ற ஸ்பின்னர்களும், சஹர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க:இந்த ரகசியத்தை மட்டும் நான் வெளிய சொல்லிட்டா யாரும் என்னை ஏலத்துல எடுக்கமாட்டாங்க – வைரலாகும் தோனியின் பேட்டி

சொல்லப்போனால் கடைசியாக ஐபிஎல் நடைபெற்ற 2019 சீசனில் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமாக இருந்த சென்னை மைதானம் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் இம்முறை அதை பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக இருக்கும் அளவுக்கு மாற்றி ரசிகர்களுக்கு தரமான போட்டிகளை விருந்து படைத்த சேப்பாக்கம் மைதான பராமரிப்பாளர்களுக்கு ரசிகர்களான நாமும் பாராட்டுகளை தெரிவிப்போம்.

Advertisement