விக்கெட் விழாத வெறியை ஸ்மித்திடம் காட்டிய சிராஜ் – ரசிகர்கள் திட்டினாலும் திருப்பு முனையுடன் மிரட்டல்

- Advertisement -

ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7ஆம் தேதியன்று இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா வானிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீழ்த்துவதாக அறிவித்ததுடன் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த நிலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளிலேயே சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை சிறப்பாக செய்து கொண்டு 327/3 ரன்கள் குவித்து மிரட்டியது.

அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா டக் அவுட்டானாலும் டேவிட் வார்னர் 43, உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 26 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தனர். அதை விட 3வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித்துடன் கைகோர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் விரைவாக ரன்களை சேர்த்து ஃபைனலில் சதமடித்த முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்தார். அந்த நிலைமையில் இன்று துவங்கிய 2வது நாளில் 95 ரன்களில் இருந்த ஸ்மித் தன்னுடைய 31வது சதத்தை விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

போராடும் சிராஜ்:
அதே போல மறுபுறம் தொடர்ந்து அசத்திய டிராவிஸ் ஹெட் 150 ரன்களை நெருங்கி இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்ததால் ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது 86வது வீசிய முகமது சிராஜ் 3வது பந்தை வீசுவதற்கு வேகமாக ஓடி வந்தார். அந்த சமயத்தில் பந்தை எதிர்கொள்வதற்கு தயாரான ஸ்மித் கடைசி நேரத்தில் ஸ்பைடர் கேமரா நகர்ந்ததால் விலகினார். அதனால் ஏற்கனவே விக்கெட்டுகள் விழாமல் இருந்த நிலையில் அதே ஓவரின் முதல் 2 பந்துகளில் ஸ்மித் அடுத்தடுத்த பவுண்டரிகள் அடித்து சதத்தை எட்டிய கடுப்பில் இருந்த சிராஜ் பந்தை அவரை நோக்கி தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் கேமரா நகர்ந்ததால் தான் தாமும் நகர்ந்தேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார். அப்போது இந்த போட்டியில் சுமாராக பந்து வீசும் நீங்கள் விக்கெட்டுகளை எடுக்காத கடுப்பில் இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என இந்திய ரசிகர்களும் சிராஜை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். குறிப்பாக விக்கெட் எடுக்க முடியாமல் இப்படி தேவையற்ற சீன் போட வேண்டாம் என்றும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால் பொதுவாக இது போன்ற நிகழ்வுகள் அல்லது ஸ்லெட்ஜிங் நடந்தாலே அது ஏதோ ஒரு தரப்பில் பதற்றத்தை உருவாக்கி தடுமாற வைக்கும்.

- Advertisement -

அந்த வகையில் அடுத்த சில ஓவர்களில் மேற்கொண்டு 16 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 163 (174) ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த கேமரூன் கிரீன் 6 (7) ரன்களில் ஷமியில் வேகத்தில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சவாலை கொடுத்த ஸ்மித் 121 ரன்களில் தாக்கூர் வேகத்தில் போல்ட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த மிட்சேல் ஸ்டார்க் 5 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மொத்தத்தில் பந்தை சிராஜ் எறிந்த அந்த தருணத்திற்கு பின் ஆஸ்திரேலியா 64 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தது இந்தியாவுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.

ஆனாலும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி நங்கூரமாக நின்று விளையாடுவதால் 2வது உணவு இடைவெளிக்கு பின் 427/7 ரன்களை கடந்து ஆஸ்திரேலியா வலுவான நிலையிலேயே விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீச தடுமாறும் இந்தியா விரைவாக ஆல் அவுட் செய்வதற்கு திணறி வருவது இந்திய ரசிகர்களை தொடர்ந்து கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement