
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதன்மையான சூப்பர் 12 சுற்று வரும் அக்டோபர் 22ஆம் தேதியன்று துவங்குகிறது. அதில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை அக்டோபர் 23ஆம் தேதியன்று எதிர்கொள்கிறது. முன்னதாக கடந்த உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக முன்னேறியுள்ளது.
ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற மினி உலகக் கோப்பையை போன்ற ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள ஹர்ஷல் பட்டேல் போன்றவர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி சுமாரான பார்மில் உள்ளனர். இருப்பினும் நிலைமையைச் சமாளிப்பதற்காக பும்ராவின் இடத்தில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாட காத்திருந்த தீபக் சஹர் மீண்டும் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறினார்.
மிரட்டும் ஷமி:
அதன் காரணமாக மற்றொரு மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் விளையாட ஆஸ்திரேலியா பயணித்துள்ளார். கடந்த உலக கோப்பையில் முழுமையாக விளையாடிய அவரை 30 வயதை கடந்து விட்டார் என்பதற்காக கழற்றிவிட்ட பிசிசிஐ ஹர்ஷல் பட்டேல், அவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளித்தது. ஆனால் அந்த பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் 2022 ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்து குஜராத் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய ஷமிக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமாறு முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.
இருப்பினும் டி20 உலக கோப்பையில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டும் இடம் பிடித்திருந்த அவர் கடைசி வாய்ப்பாக கிடைத்த தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் கரோனோவால் துரதிஷ்டவசமாக வெளியேறினார். ஆனால் மீண்டும் பும்ரா காயமடைந்ததால் தற்போது உலக கோப்பையில் தேர்வாகியுள்ள அவர் கடந்த ஒரு வருடமாக எவ்வித சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடாததால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற கேள்வி நிலவுகிறது. குறிப்பாக அவருடைய தற்சமய பார்ம் என்னவென்று தெரியாததால் அவருக்கு பதில் முகமது சிராஜுக்கு வாய்ப்பளிக்குமாறு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் உலகத்தரம் வாய்ந்த பவுலரான தாம் எப்போதும் பார்மில் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் வகையில் பிரிஸ்பேன் நகரில் உள்ள இந்திய அணியுடன் இணைந்துள்ள முகமது சமி அங்கு நடைபெற்ற வலை வலைப்பயிற்சியில் தன்னுடைய தரத்தை காட்டினார். ஆம் தற்சமயத்தில் அட்டகாசமான பார்மில் இருக்கும் மூத்த வீரரான தினேஷ் கார்த்திக்க்கு எதிராக பந்து வீசிய அவர் ஒரு சில பந்துகளிலேயே கிளீன் போல்ட்டாக்கினார்.
அதே சமயம் யுஸ்வேந்திர சஹால், ஹர்ஷல் பட்டேல் போன்ற இதர இந்திய பவுலர்களை அசால்ட்டாக எதிர்கொண்டு இறங்கி அடிக்கும் தினேஷ் கார்த்திக் முகமது ஷமியின் பந்தில் தொடர்ச்சியாக வலைப்பயிற்சியில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார் ஆகியோரை விட முகமது சமி எப்போதுமே சற்று அதிகப்படியான 140 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசக்கூடிய பவுலர் என்பதே அதற்கு காரணமாகும். அந்த வகையில் பயிற்சியிலேயே அசத்தும் அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 2 பயிற்சி போட்டிகளிலும் விளையாட உள்ளார்.
அதனால் உலகக் கோப்பைக்கு முன்பாக முழுமையாக தயாராகி நல்ல பார்மில் ஷமி பந்து வீசுவார் என்று உறுதியாக நம்பலாம். ஏனெனில் ஏற்கனவே 2015இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்து 2வது இந்திய பவுலராக அசத்திய அவர் சமீப காலங்களில் அங்கு நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடிய அனுபவமும் கொண்டுள்ளார். அதனால் ஆஸ்திரேலியா மைதானங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள அவருக்கு அதிக நேரம் தேவைப்படாது என்றே கூறலாம்.