வீடியோ : இது எப்படி அவுட்டில்லாம போகும்? டு பிளேஸிஸ் முதல் ரசிகர்கள் வரை அம்பயரை திட்ட காரணம் என்ன

Catch Aus vs SA
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து 2 – 0* என்ற கணக்கில் பின்தங்கி ஆரம்பத்திலேயே கோப்பையை நழுவ விட்டது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் சந்தித்த இந்த அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் 2வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு சரிந்த அந்த அணியின் பைனல் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அந்த நிலைமையில் ஜனவரி 4ஆம் தேதியன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கடந்த போட்டியில் இரட்டை சதமடித்திருந்த டேவிட் வார்னர் ஆரம்பத்திலேயே 10 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து 79 ரன்களில் அவுட்டானார். மேலும் மாலை வேளையில் மோசமான வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்ட நிலையில் 147/2 ரன்களுடன் விளையாடி வரும் ஆஸ்திரேலியாவுக்கு களத்தில் உஸ்மான் கவஜா 54 ரன்களுடன் உள்ளார்.

- Advertisement -

அவுட்டா இல்லையா:
முன்னதாக அப்போட்டியில் 130/1 என்ற நிலையில் ஆஸ்ரேலியா விளையாடிக் கொண்டிருந்த போது மார்கோ யான்சென் வீசிய 40வது ஓவரின் 5வது பந்தில் மார்னஸ் லபுஸ்ஷேன் எட்ஜ் கொடுத்தார். அதை 2வது ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த தென்னாப்பிரிக்க வீரர் ஹார்மர் தரையோடு தரையாக கேட்ச் பிடித்தார். அதனால் தொடர்ந்து தென்னாபிரிக்க அணியினர் விக்கெட்டை கொண்டாடிய நிலையில் அருகிலிருந்து அதை பார்த்த விக்கெட் கீப்பர் கெய்ல் வெரின் அது அவுட் தான் என்று உறுதியாக நடுவரிடம் கையை உயர்த்தி சொன்னார்.

ஆனாலும் பக்கவாட்டில் இருந்த நடுவருடன் விவாதித்த முதன்மை நடுவர் 3வது நடுவரை நாடுவதற்கு முன்பாக முதற்கட்ட தீர்ப்பாக அவுட் வழங்கினார். அதைத்தொடர்ந்து அதை 3வது நடுவர் சோதித்த நிலையில் நேரான கோணத்தில் பார்த்த போது பந்து அவருடைய கையில் பிட்சாகி பவுன்ஸ் ஆனது தெரிந்தது. அதனால் தென்னாபிரிக்க வீரர்கள் அவுட் என்பதில் உறுதியாக உறுதியாக இருந்தாலும் தமது மனதுக்கு திருப்தியடையாத 3வது நடுவர் ரிச்சர் ஹெட்டல்ப்ரோக் மீண்டும் பக்கவாட்டு பகுதியிலிருந்து ஆய்வு செய்தார்.

- Advertisement -

அந்த கோணத்தில் பந்து களத்தில் பவுன்ஸ் ஆவதைப் போன்ற தோற்றமும் கைவிரல்கள் அடியில் இல்லாததை போன்ற தோற்றமும் கிடைத்ததால் 3வது நடுவர் அவுட்டில்லை என்று அறிவித்தது ஆஸ்திரேலிய ரசிகர்களையும் அணியினரையும் மகிழ்ச்சியடைய வைத்தாலும் தென்னாப்பிரிக்க வீரர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில் நேரான கோணத்தில் இருந்து பார்க்கும் போது பந்துக்கு அடியில் கைகள் இருந்தது தெரிந்தது. அத்துடன் பக்கவாட்டு பகுதியிலிருந்து பார்க்கும் போது அந்த முக்கிய தருணத்தை நிறுத்தி பார்த்த வீடியோ பிரேம் தெளிவாக இல்லை.

அப்படிபட்ட நிலையில் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த முதன்மை தீர்ப்பை தானே நீங்கள் எடுத்திருக்க வேண்டும் எப்படி அவுட்டில்லை என்று அறிவிக்கலாம் என ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 3வது நடுவரை கடுமையாக விமர்சித்தனர். அதையே தெரிவித்த முன்னாள் தென்னாப்பிரிக்கா கேப்டன் டு பிளேஸிஸ் களத்தில் இருக்கும் நடுவர் அவுட் கொடுத்து விட்டதால் அது நிச்சயமாக அவுட் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதே போல் மற்றொரு முன்னாள் வீரர் அல்பி மோர்க்கள் அதை அவுட் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்கஅக்சர் படேலுக்கு கடைசி ஓவரை வீச கொடுத்தது இதற்காகத்தான் – போட்டிக்கு பின் கேப்டன் பாண்டியா சொன்ன பதில்

மேலும் என்ன தான் டெக்னாலஜி சிறந்து விளங்கினாலும் இது போன்ற தருணங்கள் முதலில் மனிதனின் புரிதலுக்கும் விளக்கத்திற்கும் உட்பட்டதாகவே இருக்க வேண்டும். எனவே இது அவுட் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவும் விமர்சித்துள்ளார். அது போலவே இந்த தீர்ப்புக்கு குறைவான சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.

Advertisement