கவாஜா ஸ்டம்ப்களை 153 கி.மீ வேகத்தில் பறக்க விட்ட மார்க் வுட் மாஸ் சாதனை – மார்ஷ் மிரட்டல் சதத்தால் போராடும் ஆஸி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்டு சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்குள்ளான இங்கிலாந்து ஜூலை 6ஆம் தேதி ஹெண்டிங்க்லே நகரில் துவங்கிய 3வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே ஸ்டுவர்ட் ப்ராட் பந்தில் மீண்டும் பெட்டி பாம்பாக அடங்கிய டேவிட் வார்னர் 4 ரன்களில் அவுட்டாக நல்ல பார்மில் இருக்கும் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை 155.3 கி.மீ வேகத்தால் மார்க் வுட் ஸ்டம்ப்களை சிதறடித்து கிளீன் போல்ட்டாக்கினார். அந்த நிலைமையில் நங்கூரத்தை போட முயன்ற மார்னஸ் லபுஸ்ஷேனுடம் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் 21 ரன்களில் அவுட்டாக தன்னுடைய 100வது போட்டியில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களில் ப்ராட் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

மார்க் வுட் வேகம்:
அதனால் 85/4 என சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய ஆஸ்திரேலியாவை மிடில் ஆர்டரில் புதிதாக சேர்க்கப்பட்ட மிட்செல் மார்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டைப் போல அதிரடியாக விளையாடி 17 பவுண்டரி 4 சிக்சருடன் 118 ரன்களை 100 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி சவாலை கொடுத்து அவுட்டானார். ஆனால் அவருடன் விளையாடிய டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்தது தவிர்த்து அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இங்கிலாந்து 60.4 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை வெறும் 263 ரன்களுக்கு சுருட்டியது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பட்டைய கிளப்பும் வேகத்தில் பந்து வீசிய மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்ட ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனை அதிரடியாக நீக்கிய இங்கிலாந்து மார்க் வுட்டுக்கு வாய்ப்பு கொடுத்தது. அதை சரியாக பயன்படுத்திய அவர் இப்போட்டியில் பெரும்பாலான சமயங்களில் 150 கி.மீ வேகத்திற்கு மேல் பந்து வீசி ஆஸ்திரேலியாவை திணறடித்து 5 விக்கெட்டுகளை சாய்த்து அனைவரது பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக தம்முடைய முதல் ஓவரிலேயே 91, 93, 95, 93, 94, 93 மைல் வேகத்தில் வேகத்தில் வீசிய அவர் ஹெண்டிங்க்லே மைதானத்தில் அதிக வேகத்துடன் கூடிய பந்துகளைக் கொண்ட ஓவரை வீசிய பவுலராக சாதனை படைத்துள்ளதாக இங்கிலாந்து பாராட்டியுள்ளது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு கடந்த போட்டியில் அசத்திய பென் டூக்கெட்டை 2 ரன்களில் காலி செய்த கேப்டன் பட் கமின்ஸ் அடுத்து வந்த ஹாரி ப்ரூக்கையும் 3 ரன்களில் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார்.

அதனால் 22/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை மறுபுறம் தூக்கி நிறுத்த போராடிய ஜாக் கிராவ்லி 33 ரன்களில் மிட்சேல் மார்ஷ் வேகத்தில் ஆட்டமிழந்தார். அதனால் நங்கூரமாக விளையாடும் ஜோ ரூட் 19* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 1* ரன்னும் எடுத்த போது நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 68/3 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து இன்னும் 195 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இதையும் படிங்க:பர்த்டே ஸ்பெஷல் : அழுத்தத்திற்கு அஞ்சாமல் மிகச்சிறந்த ஃபினிஷராக – தல தோனி படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

தற்போதைய நிலைமையைப் பொறுத்த வரை முதலிரண்டு போட்டிகளை விட இந்த போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சில் மிரட்டிய இங்கிலாந்து பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட போராடி வருகிறது. ஆனால் அதற்கு சவாலாக ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை சாய்ந்துள்ளதால் இந்த போட்டியும் முதல் நாளிலேயே பரபரப்பான துவக்கத்தை பெற்றுள்ளது.

Advertisement