வீடியோ : அம்பயரே ரசிகனாக மாறும் அளவுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் அற்புத கேட்ச் பிடித்த இளம் வீரர் – திறமைக்கு பரிசு

Lalit Yadav Catch
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 10ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 7வது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் போராடி 167/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 25 (12), கைக்வாட் 24 (18), ராயுடு 23 (17), ஜடேஜா 21 (16), கேப்டன் தோனி 20 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சவாலான பிட்ச்சில் தேவையான ரன்களை எடுத்தனர்.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 168 ரன்களை துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர் 0, பில் சால்ட் 17, மிட்சேல் மார்ஷ் 5 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக மனிஷ் பாண்டே 27 (29), ரிலீ ரோசவ் 35 (37) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தனர். அதனால் லோயர் ஆர்டரில் அக்சர் படேல் 21 (12) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 140/8 ரன்களுக்கு டெல்லியை கட்டுப்படுத்தி வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக மதிஷா பதிரனா 3 விக்கெட்டுகளும் தீபக் சஹர் 2 விக்கெட்களும் எடுத்தனர்.

- Advertisement -

சூப்பர் கேட்ச்:
இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக 21 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து அசத்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்றார். மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டும் பேட்டிங்கில் அதிரடி காட்டத் தவறிய டெல்லி 7வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் திண்டாடுகிறது. அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு 21 (20) ரன்களை எடுத்து தடுமாறிய ரகானே அதிரடியை துவக்கும் முனைப்புடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

குறிப்பாக லலித் யாதவ் வீசிய 11வது ஓவரின் முதல் பந்திலேயே இறங்கி வந்த அவர் நேராக பவுண்டரியை அடிக்க முயற்சித்தார். இருப்பினும் எதிர்ப்புறம் நின்ற சிவம் துபேவை நோக்கி சென்ற அந்த பந்தை உன்னிப்பாக கவனித்த லலித் யாதவ் அதற்கேற்றார் போல் தரையில் படுவதற்கு முன்பாக ஒற்றை கையில் தாவி அற்புதமாக கேட்ச் பிடித்து ரகானேவை அவுட்டாக்கினார். குறிப்பாக ரகானே அடித்த வேகத்தால் கண்ணிமைக்கும் ஒரு சில வினாடிகளுக்குள் வந்த பந்தை கச்சிதமாக ஒற்றை கையில் அவர் தாவி பிடித்தது வர்ணனையாளர்கள் உட்பட அனைத்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

அப்படி கைதட்டி பாராட்டும் அளவுக்கு அற்புதமான கேட்சை பிடித்த போது அங்கே நின்று கொண்டிருந்த நடுவர் கையை உயர்த்தி அவுட் கொடுப்பதற்கு பதிலாக “வாவ் என்ன ஒரு அற்புதமான கேட்ச்” என்ற வகையில் ரசிகனாக மாறி ரியாக்சன் கொடுத்தது லலித் யாதவின் உழைப்பை காட்டுவதாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அற்புதமான கேட்ச்சை பிடித்த லலித் யாதவுக்கு போட்டியின் முடிவில் ஒரு லட்சம் பரிசும் கொடுக்கப்பட்டது. மேலும் நடுவரை ரசிகனாக மாற்றிய அந்த கேட்ச் இந்த சீசனில் பிடிக்கப்பட்ட சிறந்த கேட்ச் பட்டியலிலும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இந்த சீசனில் பிடிக்கப்பட்ட நிறைய கேட்ச்களில் சிறந்தது எது என்பதை கடைசியாக ரசிகர்கள் ஆன்லைன் வாயிலாக ஓட்டுப் போட்டு தேர்வு செய்ய உள்ளனர். அதில் வெல்பவருக்கு 10 லட்சம் பரிசு தொகை ஐபிஎல் தொடரின் ஃபைனலில் கொடுக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:CSK vs DC : நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – டேவிட் வார்னர் வருத்தம்

அதில் லலித் யாதவும் ஒருவராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். இதையடுத்து தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் டெல்லி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்து வரும் போட்டிகளில் வெல்வதுடன் சில எதிரணிகளின் கைகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது குறிப்பிடப்பட்டது.

Advertisement